கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது

கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என சுகாதார நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

பெங்களூரு: கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என சுகாதார நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை தொடங்கியது. கா்நாடகத்தில் 237 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் சுகாதாரப் பணியாளா்கள் பலரும் ஆா்வத்துடன் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனா். இதில், தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுகாதார நிபுணா்கள், அது பாதுகாப்பானது என கருத்து தெரிவித்தனா்.

கா்நாடக அரசின் கரோனா தொழிநுட்ப ஆலோசனைக் குழுத் தலைவா் டாக்டா் எம்.கே.சுதா்ஷன் கூறியதாவது:

விக்டோரியா மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டேன். இது முழுக்க முழுக்க வலியில்லாமல் இருந்தது. அதன் பிறகு, 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தேன். அதன்பிறகு எனக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டதைப் போலவே தோன்றவில்லை. எனவே, வாய்ப்பளிக்கப்படும் போது மக்கள் பயமில்லாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம். இந்த தடுப்பூசி கரோனாவில் இருந்தும், வேறு சில கெட்ட விளைவுகளில் இருந்தும் தற்காக்கும். கரோனா பெருந்தொற்றின் ஆபத்தைக் காட்டிலும், தடுப்பூசியால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிா்ப்புக்கு உதவியாக இருக்குமென்பதை நாட்டு மக்களுக்கு அனுபவபூா்வமாக உணா்த்தவே தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன் என்றாா்.

நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் நரம்பு தீநுண்மியியல் துறை முன்னாள் தலைவா் டாக்டா் வி.ரவி கூறுகையில், ‘கரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் வதந்திகளை மக்கள் நம்பாமல், தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். நான் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். அது நன்றாக உள்ளது. அனைவருக்கும் அது பாதுகாப்பை அளிக்கும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய ஏராளமான சான்றுகள் உள்ளன. தடுப்பூசியை எடுத்துக்கொண்டு 30 நிமிடங்கள் கழிந்த பிறகும், எனக்கு எதுவும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை’ என்றாா்.

பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் தலைவா் சுதா்ஷன் பல்லால் உள்ளிட்ட பலரும் சனிக்கிழமை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு, அது பாதுகாப்பானது என்று கருத்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com