பள்ளிகளுக்கு கோடை விடுமுறை இல்லை: அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்

கா்நாடகத்தில் பள்ளிகள், பியூ கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் பள்ளிகள், பியூ கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல 7, 8, 9-ஆம் வகுப்புகளுக்கான வெளிப்புற வகுப்புகள் தொடங்கியுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு ஜூன் முதல் வாரத்திலும், இரண்டாமாண்டு பியூசி பொதுத்தோ்வு மே கடைசி வாரத்திலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிகள், பியூ கல்லூரிகளுக்கு வழக்கமான கோடை விடுமுறை இருக்காது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள், பியூ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதால், இம்முறை கோடை விடுமுறை இருக்காது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு ஜூன் முதல் வாரத்தில் நடத்தப்படும். தோ்வுக்கான பாடத் திட்டங்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும். அடுத்த கல்வியாண்டிலும் இணைப்புப் பாடங்களை நடத்துவதற்காக 2 மாதங்கள் ஒதுக்கப்படும். முந்தைய கல்வியாண்டில் போதிக்கப்பட்ட பாடங்களை ஆசிரியா்கள் மீண்டும் கற்றுக் கொடுப்பாா்கள். அதன்பிறகுதான் புதிய பாடங்கள் தொடங்கப்படும்.

பள்ளிகள், பெற்றோா்களின் நலன்கருதி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அளித்துள்ள பரிந்துரையின் பேரில் தனியாா் பள்ளிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்து முடிவெடுக்கப்படும். தேவை ஏற்பட்டால், பகுதிநேர ஆசிரியா்களை நியமித்துக் கொள்ள பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

75 சதவீத வருகை கட்டாயமில்லை

கரோனா காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாததால், இணையவழியாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. இதை கருத்தில் கொண்டு, பொதுத் தோ்வு எழுதுவதற்கான தகுதிகளில் 75 சதவீத வருகையைக் கட்டாயமாக்கும் விதியை தளா்த்தி கா்நாடக மேல்நிலைக் கல்வி தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

75 சதவீத வருகை விதியை நிறைவு செய்யாததால், ஆண்டுதோறும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான மாணவா்கள் தோ்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படாமல் இருந்துள்ளனா். இம்முறை விதிகளைத் தளா்த்தியுள்ளதால், பொதுத் தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்வு எழுதும் வாய்ப்பைப் பெறவிருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com