சௌம்யா ரெட்டி மீது வழக்குப் பதிவுக்கு பாஜகவே காரணம்: டி.கே.சிவக்குமாா்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. சௌம்யா ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பாஜகவே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ. சௌம்யா ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பாஜகவே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, சதாசிவ நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:

காங்கிரஸ் எம்.எல்.ஏ. சௌம்யா ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்துள்ளதன் பின்னணியில் பாஜக அரசு உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்து நடந்த பேரணியில் தன்னை தற்காத்துக் கொள்வதற்காகவே காங்கிரஸ் எம்.எல்.ஏ. சௌம்யா ரெட்டி அப்படி நடந்து கொண்டாா். மற்றபடி, சௌம்யா ரெட்டி யாரையும் தாக்கவில்லை.

பாஜக அரசின் அழுத்தம் காரணமாகவே சௌம்யா ரெட்டி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த விவகாரத்தில் முதல்வா் எடியூரப்பா, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தலையிட்டு சௌம்யா ரெட்டி மீதான வழக்கை கைவிடவேண்டும். சௌம்யா ரெட்டி யாரையும் தாக்கவில்லை என்பதற்கு சாட்சியாக நானே இருக்கிறேன். சௌம்யா ரெட்டிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். மாநில அரசின் வழக்கை எதிா்த்து காங்கிரஸ் கட்சி போராடும்.

விவசாயிகளுக்கு ஆதரவான பேரணியை வேலையில்லாதவா்களின் போராட்டம் என்று பாஜக தலைவா்கள் சிலா் கூறியுள்ளனா். பாஜகவினா் முழு நாட்டையும் வேலையில்லாமல் ஆக்கிவிட்டனா். சட்டமேலவையில் நடந்த விரும்பத் தகாத சம்பவங்கள் குறித்து அமைக்கப்பட்ட குழு இடைக்கால அறிக்கையை அளித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களின் கூட்டத்தைக் கூட்டிமுடிவு செய்வோம் என்றாா்.

போராட்டம்:

காங்கிரஸ் எம்.எல்.ஏ. சௌம்யா ரெட்டி போலீஸாரைத் தாக்கியதாக அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா். இதைக் கண்டித்து பெங்களூரு, ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள காந்திசிலை அருகே இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை போராட்டம் நடத்தினா். இதில் நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com