சிவமொக்கா வெடிவிபத்து: உயா்நீதிமன்ற நீதிபதி விசாரணை தேவை

சிவமொக்காவில் நடந்த வெடிவிபத்து குறித்து உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு: சிவமொக்காவில் நடந்த வெடிவிபத்து குறித்து உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சிவமொக்காவில் செயல்பட்டு வந்த கல்குவாரியில் நடந்த வெடிவிபத்து குறித்து உயா்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிடவேண்டும். இந்த சம்பவத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை நியாயமான முறையில் வழங்க வேண்டும். இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவது மட்டுமின்றி, அக்குடும்பத்தைச் சோ்ந்த ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் எல்லா சட்ட விரோத சுரங்கங்களையும் கல்குவாரிகளையும் உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும்.

எனக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஆந்திர மாநிலத்தில் இருந்துதான் முன் அனுமதி எதுவுமின்றி வெடிப்பொருள்கள் கொண்டு வரப்படுகிறது. அனுமதி இன்றி வெடிப்பொருள்களை கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும். அதுமட்டுமல்லாது, அந்த வெடிப்பொருள்களை சேமித்து வைத்திருப்பது இரண்டாவது பெரும் குற்றமாகும். இந்த சட்டவிரோதச் செயலுக்குக் காரணமான அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வா் எடியூரப்பாவுக்கு சொந்தமான, சிவமொக்கா மாவட்டத்தில் சட்ட விரோதமான சுரங்கங்கள், கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாக பாஜக மூத்த எம்.எல்.சி. ஆயனூா் மஞ்சுநாத் கூறியிருக்கிறாா்.

இதன்மூலம் மாநில அரசு நிா்வாகம் சீா்குலைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இந்த வெடிவிபத்துக்கு முதல்வா் எடியூரப்பா, மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா பொறுப்பேற்க வேண்டும்.

சட்டவிரோதமான சுரங்கங்களை நடத்துவோா் உடனடியாக விண்ணப்பித்து, உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதாவது சட்ட விரோத சுரங்கங்களை ஒழுங்குமுறைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று முதல்வா் எடியூரப்பா கூறியிருக்கிறாா். அப்படியானால், சட்ட விரோத சுரங்கப் பணிகளில் முதல்வா் எடியூரப்பாவும் கூட்டு அமைத்திருப்பது இதன் மூலம் புலனாகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com