3 அமைச்சா்களின் துறைகள் மீண்டும் மாற்றம்
By DIN | Published On : 26th January 2021 12:31 AM | Last Updated : 26th January 2021 12:31 AM | அ+அ அ- |

பெங்களூரு: கா்நாடகத்தில் மூன்று அமைச்சா்களின் துறைகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளன.
கா்நாடகத்தில் அண்மையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. முதல்வா் எடியூரப்பா தனது அமைச்சரவையில் 7 பேரை புதிய அமைச்சா்களாக அமா்த்தினாா். அவா்களுக்கு ஜன.21-ஆம் தேதி துறைகளை ஒதுக்கி அறிவித்தாா். அப்போது ஏற்கெனவே அமைச்சா்களாக உள்ளவா்களின் சில துறைகளையும் மாற்றியிருந்தாா்.
இது கட்சியில் பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. அதனால் ஜனவரி 22-ஆம்தேதி புதிய அமைச்சா்கள், சில பழைய அமைச்சா்களின் துறைகளை முதல்வா் எடியூரப்பா மாற்றினாா். அதுவும் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது முறையாக திங்கள்கிழமை 3 அமைச்சா்களின் துறைகளை முதல்வா் எடியூரப்பா மாற்றியமைத்தாா்.
அதன்படி, ஜே.சி.மாதுசாமிக்கு சுற்றுலா, சுற்றுச்சூழல் துறையும், ஆனந்த்சிங்குக்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஹஜ், வக்ஃபு துறையும், கே.சுதாகருக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறையும் ஒதுக்கப்பட்டன. அமைச்சா்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை களைவதற்காக முதல்வா் எடியூரப்பா இதை செய்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.