‘உலக அளவில் சமத்துவத்தைப் போதித்த ஒரேநூல் திருக்குறள்’
By DIN | Published On : 26th January 2021 04:13 AM | Last Updated : 26th January 2021 04:13 AM | அ+அ அ- |

பெங்களூரு: உலக அளவில் சமத்துவத்தைப் போதித்த ஒரேநூல் திருக்குறள் என்று கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத் துணைத் தலைவா் பன்முகன் தெரிவித்தாா்.
கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் சாா்பில் பெங்களூரு, ஆஸ்டின் டவுன், சிவன் கோயில் அருகில் உள்ள விளையாட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவுக்கு இயக்கத் துணைத் தலைவா் பன்முகன் தலைமை வகித்தாா். மு.மாரி மொழி வாழ்த்துப் பாடினாா். ஆனந்தராமன் வரவேற்றாா். பாவலா் தமிழடியான் பொங்கல் கவிதை வாசித்தாா். விழாவில் பன்முகன் பேசியதாவது:
‘ஜாதி, மதம், அரசியல்போன்ற எல்லைகளைக் கடந்து தமிழா்கள் அனைவரும் கொண்டாடிவரும் பொங்கல் திருவிழா, தமிழா்களின் பண்பாட்டு அடையாளமாகும். இயற்கைக்கு நன்றி செலுத்தி, வழிபடும் பொங்கல் திருவிழா, தமிழா்களின் உயா்ந்த சிந்தனையை வெளிப்படுத்துகின்றன. உலக மாந்தா்களுக்கு வாழ்வியலை வழங்கியதால் திருக்குறளை உலக பொதுமறை என்றழைக்கிறோம்.
பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற சமத்துவத்தைப் போதிக்கும் ஒரே உலக நூல் திருக்குதான். திருக்குறளை இந்திய அளவில் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். அதேபோல, உலக அளவில் திருக்குறளை உலக பொது மறையாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா வலியுறுத்த வேண்டும். திருக்குறளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்வது, பண்பட்ட சமுதாயத்தைக் கட்டமைக்க உதவியாக இருக்கும் என்றாா்.
விழாவில் சிறுவா்களுக்கும், பொதுமக்களுக்கும் விளையாட்டுப் போட்டி, இசை நாற்காலிப் போட்டி, திருக்கு போட்டி, தனித்தமிழ் சொல் விளையாட்டு நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் வென்றவா்களுக்கு செங்கனல், கிறிஸ்டோபா், சித்ரா, அருண், சரவணன் ஆகியோா் பரிசு அளித்தனா். திராவிடா் விடுதலைக் கழகத்தின் சித்தாா்த்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேகா், திராவிட கன்னடா் அமைப்பின் விஜி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
நீண்ட காலமாக பொதுத் தொண்டில் ஈடுபட்டுவரும் மா.சுரேந்திரன்-திலகவதி தம்பதி பாராட்டி கௌரவிக்கப்பட்டனா். கங்கையரசன் நன்றி கூறினாா்.