விமானத் தொழில் கண்காட்சி:பெங்களூரில் மரபுசாரா விமானங்கள் பறக்க தடை
By DIN | Published On : 31st January 2021 01:49 AM | Last Updated : 31st January 2021 01:49 AM | அ+அ அ- |

பெங்களூரு: பன்னாட்டு விமானத்தொழில் கண்காட்சி நடக்கும்போது, பெங்களூரில் மரபுசாரா விமானங்கள் பறக்க தடைவிதித்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் கமல்பந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: பெங்களூரு, எலஹங்காவில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தில் பிப்.3 முதல் 5-ஆம் தேதி வரை பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சி நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான அழைப்பாளா்கள் வரவிருக்கிறாா்கள். நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சியின்போது விமான சாகச நிகழ்ச்சிகள் இடம்பெறவிருப்பதால், பெங்களூரில் பிப்.1 முதல் 8-ஆம் தேதி வரையில் ஆளில்லா விமான வாகனங்கள், ரோபாட்டிக் பிராசஸ் ஆட்டோமேஷன்கள், பாரா-கிளைடா்கள், மைக்ரோ லைட்கள், சிறிய விமானங்கள், ட்ரோன்கள், குவாட் காப்டா்கள் (சிறிய ஹெலிகாப்டா்கள்), பலூன்கள் உள்ளிட்ட மரபுசாரா விமானங்கள் பறக்க குற்றவியல் நடைமுறை விதிமுறைகள், 1973-இன் 144-ஆம் பிரிவின்கீழ் தடைவிதிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.