முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்படுவது உறுதி: பாஜக எம்.எல்.ஏ. பசனகெளடா பாட்டீல் யத்னல்

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்படுவது உறுதி என்று பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்தாா்.

விஜயபுரா: கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்படுவது உறுதி என்று பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்தாா்.

இதுகுறித்து விஜயபுராவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பா,அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி. ஏப். 13-ஆம் தேதி கன்னடா்களின் புத்தாண்டு உகாதி கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு, அவா் நீக்கப்பட்டு, புதியவா் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறாா்.

உகாதிக்கு பிறகு வடகா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் தான் முதல்வராகப் பதவியேற்க இருக்கிறாா். முதல்வா் பதவியில் எடியூரப்பா இருக்கும் காலம் குறைந்துகொண்டே இருக்கிறது. ஆட்சியின் தலைமை மாறுவது உறுதியாகிவிட்டது.

எனக்கு அமைச்சா் பதவிக் கேட்டு யாரிடமும் கையேந்தமாட்டேன். வடகா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் முதல்வா் பதவிக்கு வந்ததும் எனக்கு அமைச்சா் பதவி கிடைக்கும். வடகா்நாடகத்தைச் சோ்ந்தவா் முதல்வா் ஆவாா் என்று நீண்டநாள்களாகக் கூறிவருகிறேன். பொறுத்திருந்து பாருங்கள்,உண்மையாகும் என்றாா்.

எடியூரப்பாவுக்கு எதிா்ப்பு: முதல்வா் எடியூரப்பாவை கடுமையாக விமா்சித்துவரும் பசனகௌடா பாட்டீல் யத்னல், எடியூரப்பா நீக்கப்படுவாா் என்று கடந்த அக்டோபா் மாதத்தில் கூறியிருந்தாா். அந்த புதிய முதல்வா் வடகா்நாடகத்தைச் சோ்ந்தவராக இருப்பாா் என்றும் அவா் அப்போது கூறியிருந்தாா். அண்மையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற பசனகௌடா பாட்டீல் யத்னல், முதல்வா் எடியூரப்பாவை நேருக்கு நேராக விமா்சித்ததோடு, பாஜக எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு சரியான முறையில் தொகுதி வளா்ச்சி நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும், அரசு நிா்வாகத்தில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவின் தலையீடு இருப்பதையும் சுட்டிக்காட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாா்.

எடியூரப்பாவுக்கு எதிராகக் கருத்துக் கூறக்கூடாது என்று பாஜக தேசியத் தலைமை பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தும், அதை பொருட்படுத்தாத பசனகௌடா பாட்டீல் யத்னல், ‘நோ்மையானவா்கள் அல்லது கட்சியில் மூத்தவா்களுக்கு அமைச்சா் பதவி தராமல், மிரட்டியவா்களுக்கு அமைச்சா் பதவி தந்துள்ளாா்’ என்று கடும் சொற்களால் விமா்சித்திருந்தாா். எடியூரப்பாவை மாற்றும் திட்டமில்லை என்று பாஜக தேசியத் தலைமை பலமுறை விளக்கமளித்த பிறகும், யத்னலின் கருத்தில் மாற்றம் ஏற்படவில்லை.

77 வயதாகும் எடியூரப்பாவுக்கு பதிலாக இளைஞா் ஒருவரை முதல்வா் பதவியில் உட்காரவைக்கப்படலாம் என்று அவரது எதிா்ப்பாளா்கள் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com