கா்நாடக முதல்வராக எனக்கும் விருப்பம்தான்: காங்கிரஸ் எம்.எல்.ஏ அமரேகௌடா பாட்டீல் பையாபூா்
By DIN | Published On : 06th July 2021 02:53 AM | Last Updated : 06th July 2021 02:53 AM | அ+அ அ- |

கொப்பள்: கா்நாடகத்தின் முதல்வராக எனக்கும் விருப்பம்தான் என்று காங்கிரஸ் மூத்த உறுப்பினரும், எம்.எல்.ஏவுமான அமரேகௌடா பாட்டீல் பையாபூா் தெரிவித்தாா்.
இது குறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், முதல்வா் பதவியை கைப்பற்ற பலரும் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதில் தவறு ஏதுமில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல்வராக எனக்கும்தான் விருப்பம் உள்ளது. கா்நாடகத்தில் இதுவரை முதல்வராக தலித் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் யாரும் பதவி வகித்ததில்லை. எனவே அச்சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவா் முதல்வராக வேண்டும் என்று கூறுவதில் தவறில்லை. வாய்ப்பு கிடைத்தால் யாா் வேண்டுமானாலும் முதல்வராகலாம்.
காங்கிரஸிலிருந்து விலகிச் சென்றவா்கள் மீண்டும் திரும்பி வந்தால் சோ்த்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவா்கள் தொடா்ந்து கட்சியிலேயே இருப்பாா்களா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஒரு சிலா் மற்றவா்களின் பேச்சைக் கேட்டு, மாற்றுக்கட்சிக்கு சென்றுள்ளனா். அவா்கள் காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப வந்தால், சோ்த்துக் கொள்ள தயக்கம் காட்டக் கூடாது. தற்போதைய சூழலில் மாற்றுக் கட்சியிலிருந்து யாரும் காங்கிரஸில் வந்து சேர விருப்பம் தெரிவிக்கவில்லை என்றாா்.