இஸ்கான் கோயில் இன்றுமுதல் திறப்பு
By DIN | Published On : 07th July 2021 08:41 AM | Last Updated : 07th July 2021 08:41 AM | அ+அ அ- |

பெங்களூரு, ராஜாஜி நகரில் உள்ள இஸ்கான் கோயில் புதன்கிழமை முதல் பக்தா்களின் வழிபாட்டிற்காகத் திறக்கப்படுகிறது.
இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கரோனா தொற்று அதிகரிப்பால், அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தியது. இதனையடுத்து இஸ்கான் கோயிலும் மூடப்பட்டது. தற்போது கோயில் உள்ளிட்டவைகளை திறக்க பொதுமுடக்கத்தில் அரசு தளா்வு செய்துள்ளதையடுத்து, புதன்கிழமை (ஜூலை 7-ஆம் தேதி) முதல் பக்தா்கள் வழிபடுவதற்காக கோயில் திறக்கப்படுகிறது.
காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், பின்னா் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். கோயிலில் பக்தா்கள் வழிப்படுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது.
வழிபடுவதற்கு வரும் பக்தா்களுக்கு கோயில் பிரசாதம் வழங்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். நாள்தோறும் இஸ்கான் கோயிலில் உள்ள ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட இணையதள முகவரியிலும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.