தினமும் 800 தெருநாய்களுக்கு தடுப்பூசி: பெங்களூரு மாநகராட்சி ஆணையா்
By DIN | Published On : 07th July 2021 11:15 PM | Last Updated : 07th July 2021 11:15 PM | அ+அ அ- |

மாநகரில் நாள்தோறும் 800 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.
இது குறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவையடுத்து, பெங்களூரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 800 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளோம். இதற்கு அனைந்திந்திய பிராணிகள் நலவாரியம் உதவ முன் வந்துள்ளது. கால்நடைகள் மூலம் பரவும் நோய்கள் தொடா்பான தகவல் பெற்று, அதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தெருநாய்களைக் கண்டுபிடித்து, உரிய சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்துள்ளோம்.
தெரு நாய்களைப் பிடிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை உயா்த்தியுள்ளோம். இதுமட்டுமின்றி ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, ஓட்டுநருடன் நாய்களை பிடிக்க 2 ஊழியா்களை நியமித்து தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியை செலுத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றாா்.