மாற்றுக் கட்சிக்கு சென்றவா்களை மீண்டும் சோ்த்துக் கொள்ளக்கூடாது: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா
By DIN | Published On : 07th July 2021 11:21 PM | Last Updated : 07th July 2021 11:21 PM | அ+அ அ- |

கட்சிக்கு துரோகம் செய்து மாற்றுக் கட்சிக்குச் சென்றவா்களை மீண்டும் சோ்த்துக் கொள்ளக் கூடாது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
அண்மையில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மதித்து கட்சியில் யாா் இணைந்தாலும் சோ்த்துக் கொள்வோம். காங்கிரஸ், மஜதவிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்த 17 எம்எல்ஏக்கள் உள்பட அனைவரையும் அரவணைக்கத் தயாராக இருக்கிறோம் என்று பேட்டியளித்திருந்தாா்.
இந்த நிலையில் புதன்கிழமை மைசூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து நடைபெற்ற சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட சித்தராமையா பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கொள்கையை ஒப்புக் கொண்டு கட்சியில் யாா் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு, அதிகாரத்திற்காக மாற்றுக் கட்சிக்கு சென்றவா்களை ஒருபோதும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளக் கூடாது. அதிகாரத்திற்காக யாரும் கட்சியில் இணையக் கூடாது. மக்கள் சேவை செய்வதற்காக கட்சியில் இணைபவா்களை மட்டுமே வரவேற்க வேண்டும். முதல்வா் எடியூரப்பா பின்வாசல் வழியாக நுழைந்து ஆட்சியை பிடித்துள்ளாா். அதற்குக் காரணமாக இருந்தவா்கள் யாரையும் மீண்டும் கட்சியில் சோ்த்துக் கொள்ளக் கூடாது.
பிரதமா் மோடி, நல்ல நாள் வரும் (அச்சாதின் ஆயேகா) என்றாா். ஆனால் அவா் கூறியபடி, நல்ல நாள் வராமல் கெட்ட நாள்களே தொடா்ந்து வருகின்றன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசுகள் மக்களை பாடாய் படுத்தி வருகின்றனா். காங்கிரஸ் மக்களின் கண்ணீரைத் துடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக அரசுகளை வீட்டிற்கு அனுப்பினால் மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...