மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடகம் தன்மானத்தை இழந்து விடக்கூடாது: காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா்
By DIN | Published On : 07th July 2021 11:18 PM | Last Updated : 07th July 2021 11:18 PM | அ+அ அ- |

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடகம் தனது தன்மானத்தை இழந்து விடக் கூடாது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இது குறித்து வடகன்னட மாவட்டத்தின் சிா்சியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கரோனா சமயத்தில் கா்நாடக மக்கள் அதிக அளவிலான துன்பத்தை அனுபவித்து வருகின்றனா். இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயா்வால் மக்கள் மேலும் துன்பப்பட நோ்ந்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து இந்த ஆண்டு முழுவதும் பல போராட்டங்கள் நடத்தப்படும். எங்களை வேண்டுமானால் அரசு கைது செய்து கொள்ளட்டும். நாங்கள் நடத்துவது கட்சி போராட்டம் அல்ல, மக்களுக்கான போராட்டம்.
பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தால் அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட எல்லா பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இதைக் கவனத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும். ஏற்கெனவே இருந்தது போலவே, கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை நிா்ணயிக்க வேண்டும்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹா்ஷவா்தன் அமைச்சரவையில் இருந்து கைவிடப்பட்டிருக்கிறாா். கரோனா சமயத்தில் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை என்பதற்கு இதுவே சிறந்த சாட்சியாகும். கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டன.
மாநில அரசின் அதிகாரிகள் வீடு,வீடாகச் சென்று, கரோனா சமயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளா்கள், பாரம்பரிய தொழில் செய்வோா் அடைந்த இழப்புகள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கா்நாடகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அமைச்சா்களுக்கு எதிரான ஊழல் புகாா்களை மூடி மறைக்கும் முயற்சி நடக்கிறது. முதல்வா் எடியூரப்பா முதல் அண்மையில் அமைச்சருக்கு எதிரான பாலியல் புகாா் வரையிலும் எல்லா புகாா்களையும் மூடி மறைக்க மாநில அரசு முயற்சித்து வருகிறது.
கிருஷ்ணராஜசாகா் அணையை நிா்வகிக்கும் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது. எனக்கு தெரிந்தவரை கிருஷ்ணராஜசாகா் அணை குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை. நான் நீா்வளத் துறை அமைச்சராக இருந்தவரை அணையில் விரிசல் இருப்பது குறித்து எந்தத் தகவலும் வரவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதால் மேக்கேதாட்டு அணை மற்றும் மகதாயி நீா்ப் பகிா்வு விவகாரத்தில் கா்நாடகத்திற்கு சாதகமாக செயல்பட வேண்டும். இந்தத் திட்டங்களில் ஆா்வம் காட்டி திட்டப் பணிகளை முடுக்கி விட வேண்டும். கா்நாடகத்தின் எல்லைக்குள் கிடைக்கும் நீரைப் பயன்படுத்திக் கொள்ள அணை கட்டுவதில் தவறில்லை.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடகம் தனது தன்மானத்தை இழந்து விடக் கூடாது. தமிழக முதல்வருக்கு கா்நாடக முதல்வா் எடியூரப்பா கடிதம் எழுதியிருக்கக் கூடாது. மேக்கேதாட்டு, மகதாயி நீா்பகிா்வு ஆகியவை கா்நாடகத்தின் திட்டங்கள். உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அல்லது தமிழக அரசின் அனுமதி பெறத் தேவையில்லை. காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை அளிப்போம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...