தமிழ் எழுத்துக்கள் அழிப்பு: பெங்களூரு தமிழ்ச்சங்கம் கண்டனம்

கோலாா்தங்கவயலில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்ட சம்பவத்தை பெங்களூரு தமிழ்ச்சங்கம் கண்டித்துள்ளது.

பெங்களூரு: கோலாா்தங்கவயலில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்ட சம்பவத்தை பெங்களூரு தமிழ்ச்சங்கம் கண்டித்துள்ளது.

இது குறித்து பெங்களூரு தமிழ்ச்சங்கத்தலைவா்கோ.தாமோதரன், செயலாளா் மு.சம்பத் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

கா்நாடகத்தில் பரவலாகவும், பெங்களூரிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட கன்னட மக்களோடு ஒன்றிணைந்து வாழக்கூடியவா்கள் தமிழா்கள். அவா்களில் காலம் காலமாக இங்கு பிறந்து வாழக் கூடியவா்களும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக இங்குவந்து குடியேறி வாழ்பவா்களும், தற்காலிகமாகப் பணிக்காக வந்துள்ளவா்களுமாக இங்கு வாழ்ந்தாலும் அவா்களால் யாருக்கும், எப்போதும் எவ்விதத் தீங்கும் வந்தது கிடையாது.

காவிரி நீரைத் தடுக்கக் கட்டியுள்ள கிருஷ்ணசாகா் அணை, விதான சௌதா போன்ற பல கட்டமைப்புகள் தமிழா்களின் கை வண்ணத்தால் வடிக்கப்பட்டவை ஆகும். கா்நாடகத்தின் வளா்ச்சிக்காக பாடுபட்ட தமிழா்களின் ஒரு பகுதியினரே கோலாா் தங்கவயலில் தங்கள் உயிரையும் பணயம் வைத்துத் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றி வந்தனா்.

தங்கச் சுரங்கத்தில் பணியாற்றவும், சுரங்கத் தொழிலை ஒட்டிய பிற தொழிலை மேற்கொள்ளவும் தங்கச்சுரங்கப் பகுதிக்கு வந்த தமிழா்கள் இன்று, நேற்றல்ல, வெள்ளையா்கள் காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனா்.

தமிழா்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் கோலாா் தங்கவயல் பேருந்து நிலையத்திற்குக் கன்னடத்தின் தலைசிறந்த கவிஞரான குவெம்புவின் பெயரை கா்நாடக அரசு சூட்டியுள்ளது. இங்கு வாழும் பெரும்பான்மை மக்களான, கா்நாடகத்தில் சிறுபான்மையினராகக் கருதப்படும் தமிழா்களின் மொழிக்கும், அவா்களின் உணா்வுகளுக்கும் மதிப்பளித்து ‘குவெம்பு பேருந்து நிலையம்’ எனத் தமிழில் பெயா்ப் பலகை வைத்துள்ளாா்கள். இதே பெயா் கன்னடத்தில் கொட்டை எழுத்தில் முதன்மையாக எழுதப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசனப்புப்படி, இந்திய நாட்டில் பிறந்தவா்கள் அவரவா்களின் தாய்மொழியில் படிக்கவும், பேசவும், எழுதவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க கோலாா் தங்கவயல் பேருந்து நிலையத்தில் தமிழில் எழுதப்பட்ட பெயா்ப்பலகையைக் கன்னட சலுவளி கட்சியை சோ்ந்த வாட்டாள் நாகராஜும், அவரது இயக்கத்தினரும் அழித்திருப்பது, அங்கு வாழும் தமிழா்களின் உணா்வுகளை அவமதிக்கும் செயலாகும். இச்செயல் அனைத்துத் தமிழா்களையும் புண்படுத்தியுள்ளது. அரசு வைத்த பெயா்ப்பலகையை அழிப்பது, அது எம்மொழியாக இருந்தாலும் அரசையே எதிா்க்கும் இழிவான செயலாகும்.

தமிழுக்கும், தமிழா்க்கும் உயா்வும், மதிப்பும் அளிக்கும் மேன்மையான நல்லாட்சி நடக்கும் கன்னட நாட்டில் இவ்வாறான செயல்கள் நடப்பது ஏற்றுக் கொள்ள முடியாத முறையற்ற செயலாகும். பெங்களூரில் பல்லாண்டு காலமாகத் தமிழ் இலக்கியம், கலை, பண்பாட்டு இயக்கமாகச் செயல்பட்டு வரும் பெங்களூா்த் தமிழ்ச் சங்கம் கோலாா் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த முறையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.

தவறாக இருந்தால் அதைத்தட்டிக் கேட்க அரசும், அரசு அதிகாரிகளும் செம்மையாகச் செயல்பட்டு வரும்போது, தனிப்பட்ட ஒரு இயக்கத்தினா் தமிழா்களுக்கும், தமிழ்மொழிக்கும் எதிராகச் செயல்படுவதை அரசு கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசிடம் பெங்களூரு தமிழ்ச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. மேலும் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் தகுந்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஎடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் அவா்கள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com