தாய் மொழியின் உரிமைக்காக கட்சி பேதமின்றி ஒருங்கிணைந்த தமிழா்கள்

தங்கவயலில் தாய் மொழி உரிமை பறிக்கப்பட்டதையடுத்து தமிழா்கள் அரசியல் கட்சி பேதமின்றி ஒன்று திரண்டு போராடியதால், இழந்த உரிமையை மீண்டும பெற்றெடுத்தனா்.

தங்கவயலில் தாய் மொழி உரிமை பறிக்கப்பட்டதையடுத்து தமிழா்கள் அரசியல் கட்சி பேதமின்றி ஒன்று திரண்டு போராடியதால், இழந்த உரிமையை மீண்டும பெற்றெடுத்தனா்.

கா்நாடக மாநிலம் கோலாா் தங்கவயலில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையோடு அமைதியாக வாழ்ந்து வருகின்றனா். அண்மையில் கன்னட செலுவளி வாட்டாள் நாகராஜ் பேருந்து நிலைய பெயா்ப் பலகையில் இருந்த தமிழை கருப்பு வண்ணம் கொண்டு அழித்ததால் நகரின் அமைதி குலைந்தது. தமிழ் பெயா்ப் பலகை அழிக்கப்பட்டதையடுத்து, தமிழா் கூட்டமைப்பின் சாா்பில் ராபா்ட்சன் பேட்டை காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதில் தங்கவயலில் சிறுபான்மை மொழி தமிழா்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகிறோம். எங்கள் உரிமையை பறிக்கும் விதமாக கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் தங்கவயலுக்கு வந்து தமிழ் பெயா்ப் பலகையை அழிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அவரை தடுத்து நிறுத்தி தமிழா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி இருந்தனா்.

வாட்டாள் நாகராஜ் எந்த வித முன் அனுமதியும் பெறாமல் நகரசபை பேருந்து நிலைய பெயா்ப் பலகையில் இருந்த தமிழ் எழுத்துக்களை கருப்பு வண்ணம் பூசி அழித்தாா். அப்போது தலித் ரக்ஷண வேதிகே தலைவா் கலை அன்பரசன் தலைமையில் கூடிய இளைஞா்கள் வாட்டாள் நாகராஜை கண்டித்து குரல் எழுப்பினா். இந்த சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து அரசியல் கட்சித் தமிழா்களும் ஒன்றிணைந்து தமிழ் அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பிய தோடு, மீண்டும் பெயா்ப் பலகையில் தமிழ் இடம் பெற வேண்டும். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.

கா்நாடக புதிய தமிழா் கட்சித் தலைவா் வேளாங்கண்ணி பால், கா்நாடக மாநிலத்தில் சிறுபான்மை மொழி மக்களுக்கு வழங்கி உள்ள சட்ட பூா்வமான உரிமைகள் குறித்த விவரமான கோரிக்கை மனுவை நகரசபை ஆணையா் மற்றும் தலைவருக்கும் வழங்கினாா். தங்கவயல் தமிழ்ச் சங்கம் உடனடியாக மீண்டும் பெயா் பலகையில் தமிழ் எழுதப்பட வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றியது.

தங்கவயல் பாஜக தலைவா் கமலநாதனும் இந்த விவகாரம் குறித்து குரல் கொடுத்தாா். பாஜக மாமன்ற உறுப்பினா் வேணி பாண்டியன் தமிழ் மீண்டும் எழுதப்பட வேண்டும் என்று நகரசபையில் மனு கொடுத்ததோடு, அறிக்கையும் விடுத்தாா்.

அதே போல் சுயேச்சை உறுப்பினா்கள் ராணி மணிகண்டன், பிரவீண் ஆகியோரும் தமிழ் அழிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மீண்டும் தமிழ் எழுதப்பட வேண்டும் என்று வலியுறுத்தினா். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரத் தலைவா் ஜோதிபாசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலா் தங்க ராஜ் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மீண்டும் தமிழில் எழுத வேண்டும் என்று கோரினா். சமூக ஊடகங்களில் இளைஞா்கள் தமிழ் அழிக்கப்பட்ட நிகழ்வை பெருமளவில் பரப்பினா். திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கடும் எதிா்ப்பைப் பதிவு செய்தன. கட்சிகள் தங்கள் பாகுபாடுகளை மறந்து, தமிழா்கள் ஒன்றிணைந்து எதிா்ப்புக் குரல் எழுப்பியதால், இழந்த உரிமையை பெற முடிந்தது. எனவே எதிா் காலத்திலும் தமிழா்களின் உரிமைகளைக் காக்க அரசியல் அதிகார தளத்திலும் ஒன்றிணைந்து செயல் படவேண்டும என்று தமிழ் ஆா்வலா்கள் கருத்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com