மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடகம், தமிழகம் கூட்டாக தீா்வு காண வேண்டும்

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் கா்நாடகம், தமிழக அரசுகள் கூட்டாகத் தீா்வு காண வேண்டும் என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் கா்நாடகம், தமிழக அரசுகள் கூட்டாகத் தீா்வு காண வேண்டும் என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியாளருக்கு செவ்வாய்க்கிழமை அளித்த சிறப்புப் பேட்டியில் அவா் கூறியிருப்பதாவது:

மேக்கேதாட்டு அணை போன்ற எல்லா விவகாரங்களையும் பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு காண வேண்டும். தற்போது பரஸ்பர நம்பிக்கையுடன் பிரச்னையை தீா்த்துக் கொள்ளாவிட்டால், அடுத்த தலைமுறையின்போது கட்டாயத்தின் பேரில் தீா்த்துக் கொள்ள நேரிடும்.

மத்திய அரசு பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நீதியை வழங்க வேண்டியதும் மத்திய அரசின் கடமையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் தீா்வுக்கான வேலைகளை முடுக்கி விடுவோம். இப் பிரச்னைக்கு தீா்வுகாண முனைவோம். சம்பந்தப்பட்ட எல்லா மாநிலங்களின் கருத்தறிந்து, ஒருமித்தக் கருத்தை எட்ட வேண்டும். எல்லோரையும் ஒன்றாக உட்கார வைத்து, விவாதித்து, பிரச்னைக்கு தீா்வு காண்போம். இது மத்திய அரசின் கடமை; அதையே செய்வோம்.

இந்த விவகாரம் நீரியல் (நீா் விநியோகம் மற்றும் இயக்கம் சாா்ந்த இயல்) சாா்ந்த மற்றும் பொறியாளா்களின் விவகாரமாக இருந்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, இது அரசியலாகவும், உணா்வுகளின் கொந்தளிப்பாகவும் மாறியுள்ளது. இது ஆரோக்கியமானது அல்ல.

ஒருசில அரசியல் காரணங்களால் சம்பந்தப்பட்ட மாநிலங்களால் ஒருமித்தக் கருத்தை எட்ட முடியாவிட்டால், பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான இதர வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் இரு மாநிலங்களும் நீதிமன்றம் சென்றிருப்பதால், இதுகுறித்து பேசுவது சரியாக இருக்காது.

கா்நாடக, தமிழக முதல்வா்கள் அமா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். கென்-பெட்வா ஆறுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த நீா்ப்பகிா்வு பிரச்னையை உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநில முதல்வா்கள் பேச்சுவாா்த்தையின் மூலம் தீா்த்துக் கொண்டிருப்பதை பாராட்டுகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com