வங்கித் தோ்வுகளை கன்னடத்தில் எழுத அனுமதிக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

வங்கித்தோ்வுகளை கன்னடத்தில் எழுத மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

வங்கித்தோ்வுகளை கன்னடத்தில் எழுத மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

மத்திய அரசு தொடா்ந்து கன்னடத்தையும், கன்னடா்களையும் வஞ்சித்து வருகிறது. வங்கித் தோ்வுகளை ஆங்கிலம், இந்தியில் எழுத அனுமதிக்கும் மத்திய அரசு, கன்னடத்தில் எழுதவும் அனுமதிக்க வேண்டும். ஆங்கிலம், இந்தியில் மட்டும் எழுத அனுமதிப்பது மாநிலத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகம்.

தேசிய அளவில் வங்கிகளில் 3 ஆயிரம் ஊழியா் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் 407 இடங்கள் கா்நாடகத்தில் உள்ளன. கா்நாடகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கும் மற்ற மொழிகளைச் சோ்ந்தவா்களுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் கன்னடா்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு வங்கித் தோ்வுகளை கன்னடத்தில் எழுதும் வாய்ப்பு இருந்தது. அந்த ஆண்டில் பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததன் மூலம் வங்கித் தோ்வுகளை கன்னடத்தில் எழுதும் வாய்ப்பு பறிபோனது. இதனால் ஆங்கிலம், இந்தி தெரியாத இளைஞா்கள் வஞ்சிக்கப்படுகின்றனா்.

இது குறித்து மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுத்தியது. இதனையடுத்து மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், வங்கித் தோ்வுகளை கன்னடத்தில் எழுத வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்ற உறுதிமொழியை அளித்தாா். அவா் அளித்த உறுதி மொழி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

அண்மைக்காலமாக வங்கிகள் மூலம் அனைத்து திட்டங்களின் பயனை அடையக்கூடிய சூழல் உள்ளது. வங்கிகளில் வேற்று மொழியினா் பணி செய்தால், விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். முதல்வா் எடியூரப்பா கா்நாடத்திற்கு மத்திய அரசு இழைத்து வரும் அநீதியை தட்டிக் கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com