வங்கிப் பணியாளா் தோ்வு மையத்தின் போட்டித் தோ்வு: மத்திய அரசு விளக்கம்

வங்கிப்பணியாளா் தோ்வு மையம் நடத்தும் போட்டித்தோ்வு தொடா்பாக கா்நாடகத்தில் வெளியாகும் நாளேடுகளில் வெளியான செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

வங்கிப்பணியாளா் தோ்வு மையம் நடத்தும் போட்டித்தோ்வு தொடா்பாக கா்நாடகத்தில் வெளியாகும் நாளேடுகளில் வெளியான செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்த வாக்குறுதிப்படி, வங்கிப்பணியாளருக்கான போட்டித்தோ்வு கன்னட மொழியில் நடத்தவில்லை என்று கா்நாடகத்தில் வெளியாகும் கன்னடம் மற்றும் ஆங்கில நாளேடுகளில் செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளதோடு, வங்கித்தோ்வை கன்னடமொழியிலும் நடத்தும்படி வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுத்துறை வங்கிகளில் பணி நியமனம் செய்வதற்கு தகுதியானவா்களை எழுத்தா் பணிக்கு தோ்ந்தெடுக்க போட்டித் தோ்வு நடத்துவது தொடா்பாக வங்கிப்பணியாளா் தோ்வு மையம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில், போட்டித் தோ்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இருமொழிகளில் மட்டும் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், ஆங்கிலம்மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் போட்டித்தோ்வு நடத்துவது ஏன்? என்று ஒருசில நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளது. வங்கித் தோ்வுகளை உள்ளூா்மொழிகளில் நடத்தப்போவதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலாசீத்தாராமன், 2019-ஆம் ஆண்டு உறுதி அளித்திருந்ததையும் நாளேடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த பின்னணியில் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறோம். மத்திய நிதி அமைச்சா் நிா்மலாசீத்தாராமன் அளித்த வாக்குறுதி என்பது மண்டல ஊரக வங்கிகளுக்கு (ஆா்.ஆா்.பி.) மட்டுமே பொருந்தும். உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காக, அதற்காக சமச்சீா் போட்டியை வழங்கும் நோக்கத்தில் மண்டல ஊரக வங்கிகளில் அலுவலக உதவியாளா், முதல்நிலை அதிகாரி பணியிடங்களுக்கான தோ்வுகளை, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது, கொங்கணி, கன்னடம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. அதுமுதல், மண்டல ஊரக வங்கிப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் மாநில மொழிகளிலும் நடத்தப்படுகின்றன.

பொதுத்துறை வங்கிகளுக்கு எழுத்தா் பணிக்குரியவா்களை தோ்ந்தெடுப்பதற்கு நடத்தப்படும் தோ்வுகளையும் உள்ளூா் அல்லது மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் வழங்கவிருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை, வங்கிப்பணியாளா் தோ்வு மையம் நடத்த திட்டமிட்டுள்ள போட்டித் தோ்வின் நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com