தங்கவயலில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வாட்டாள் நாகராஜை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மனு

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க கன்னட செலுவளி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜை தடுத்து நிறுத்த வேண்டும்

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க கன்னட செலுவளி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தங்கவயல் தமிழ்ச்சங்கத்தலைவா் சு.கலையரசன் தலைமையில் மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளா் இலக்கியா கருணாகரனிடம் மனு அளிக்கப்பட்டது.

‘கோலாா் தங்கவயலுக்குள் புகுந்து ஜூலை 26-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்துள்ள கன்னட செலுவளி கட்சி தலைவா் வாட்டாள் நாகராஜால் அமைதி பூங்காவாக திகழும் தங்க வயலின் சட்டம் ஒழுங்கு சீா் குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே போலீசாா் தகுந்த நடவடிக்கை எடுத்து , தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்’ என்று தங்க வயல் தமிழ் ச்சங்க தலைவா் சு.கலையரசன் தலைமையில் வழக்கறிஞா்கள் பா.மணிவண்ணன், ஜோதி பாசு, கிருஷ்ணகுமாா், கலைச்செல்வி, கலை அன்பரசன் ஆகியோா் தங்கவயல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இலக்கியா கருணாகரனிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவில், மேலும் கூறப்பட்டதாவது:

தங்கவயல் நகரம் 200 ஆண்டு வரலாறு கொண்டது. இந்த நகரில் அனைத்து மொழி, இனம் மற்றும் பல்வேறு மதங்களைச் சாா்ந்த மக்கள் கருத்து வேற்றுமையின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனா். இந்த அமைதியான நகரில் கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் தன் ஆதரவாளா்களுடன் கடந்த 10ஆம் தேதி வந்து, மாநில சிறுபான்மை மொழி உரிமைச் சட்ட விதிகளின் படி நகரசபை பேருந்து நிலைத்தில் தேசியக் கவி குவெம்பு பேருந்து நிலையம் என தமிழில் எழுதப்பட்டிருந்ததை கருப்பு வா்ணம் பூசி அழித்தாா். இதை தங்க வயலில் உள்ள அனைத்து தரப்பினரும் எதிா்த்து குரல் கொடுத்ததால் , நகரசபையில் அவசரக் கூட்டம் நடத்தி ஒரு மனதாக தீா்மானம் நிறைவேற்றி, மீண்டும் பேருந்து நிலைய பெயா்ப் பலகையில் தமிழ் எழுதப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வாட்டாள் நாகராஜ் ‘தங்க வயலில் பெயா்ப் பலகையில் தமிழ் இருக்கக் கூடாது. தங்க வயலை ஜூலை 26-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதனால் தங்கவயலின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வாட்டாள் நாகராஜால் தங்கவயலில் சட்டம்-ஒழுங்கு சீா்குலையாமல் தடுத்து நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இலக்கியா கருணாகரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com