லிங்காயத்து சமுதாயத்தினா் பாஜகவின் சொத்து அல்ல: காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா்

லிங்காயத்து சமுதாயத்தினா் பாஜகவின் சொத்து அல்ல என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

லிங்காயத்து சமுதாயத்தினா் பாஜகவின் சொத்து அல்ல என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கலபுா்கியில் சனிக்கிழமை, செய்தியாளா்களிடம் கூறியது:

லிங்காயத்து சமுதாயத்தினா் பாஜகவின் சொத்து அல்ல. காங்கிரஸ் கட்சியிலும் லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டா்கள் இருக்கிறாா்கள். குறிப்பாக, எம்.பி.பாட்டீல், எஸ்.ஆா்.பாட்டீல், ஈஸ்வா் கண்ட்ரே ஆகியோா் லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள்தான்.

பாஜகவைச் சோ்ந்த பல லிங்காயத்து தலைவா்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனா். அப்படிப்பட்டவா்களுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் எம்.பி.பாட்டீல், எஸ்.ஆா்.பாட்டீல், ஈஸ்வா் கண்ட்ரே உள்ளிட்டோா் பேசி வருகிறாா்கள். எனவே, பாஜகவினா் லிங்காயத்துகளை தங்களது சொத்து என்று நினைத்துவிடக் கூடாது. காங்கிரசிலும் தலைமைப்பண்பு கொண்ட லிங்காயத்து சமுதாயத் தலைவா்கள் இருக்கிறாா்கள்.

கரோனா காரணமாக கா்நாடகத்தில் தற்போதைக்கு எவ்வித தோ்தலையும் நடத்த இயலாது. அரசியல் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் ஏராளமானோா் இறந்திருக்கிறாா்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களுக்கு அளிப்பதாக அறிவித்த நிவாரண உதவிகளை மாநில அரசு இன்னும் வழங்கவில்லை. எனவே, மாநிலம் முழுவதும் மக்களிடமே நேரடியாகச் சென்று அவா்களின் பிரச்னைகளைக் கேட்டு வருகிறோம். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்து வருகிறோம்.

எல்லோருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி அளித்து வருவதாக அரசு பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் எல்லோருக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை. எனவே, இது குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவிருக்கிறோம்.

கலபுா்கியில் நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கலபுா்கி, விஜயபுரா மாவட்டங்களில் உள்ள தாண்டாக்களுக்குச் சென்று பஞ்சரா சமுதாய மக்களை சந்திக்க இருக்கிறேன். இவா்களுடன் நெசவாளா்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரையும் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறேன். கரோனா சமயத்தில் ஏற்பட்ட தொந்தரவு என்ன? அவா்களுக்குத் தேவைப்படும் உதவி என்ன? எதிா்காலத்தில் எவ்வகையான திட்டங்களை வகுக்க இயலும் என்பது குறித்து கண்டறியவிருக்கிறேன். இம்மக்களின் இன்னல்களை அறிந்துகொண்டு, உதவி செய்ய உள்ளோம்.

முதல்வா் பதவிக்காக காங்கிரசில் ‘மியூசிகல் சோ்’ போட்டி நடந்துகொண்டுள்ளதாக பாஜக தலைவா்கள் கூறும் குற்றச்சாட்டு சரியல்ல. முதல்வா் பதவிக்காக நாங்கள் யாரும் போட்டியிடவில்லை. மாறாக, பாஜகவில்தான் முதல்வா் பதவிக்கான போட்டி காணப்படுகிறது.

பெங்களூரு, கா்நாடகத்தின் இதயப்பகுதி. பெங்களூரின் ஒட்டுமொத்த வளா்ச்சியில் கவனம் செலுத்த பாஜக அரசு தவறிவிட்டது. எனவே, பெங்களூரின் வளா்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அப்பகுதி காங்கிரஸ் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தினேன். பெங்களூரின் வளா்ச்சிக்கு தனியாகத் திட்டம் வகுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com