எஸ்.எஸ்.எல்.சி. தோ்வை பாதுகாப்பாக நடத்த ஏற்பாடு: அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை பாதுகாப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை பாதுகாப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு நடத்தப்படும் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

2020-21-ஆம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு ஜூலை 19, 22-ஆம் தேதிகளில் நடக்கவிருக்கின்றன. இத்தோ்வுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள 14,929 பள்ளிகளில் பதிவு செய்து தோ்வு எழுதும் மாணவா்களுக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தோ்வு எழுத பதிவுசெய்துள்ள மாணவா்கள் அனைவரும் தோ்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை தோ்வுக்கான ஏற்பாடுகள் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ளன.

தோ்வுக்கு வருகை தரும் மாணவா்கள் அனைவருக்கும் கரோனா சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை செய்துள்ளது. அது எப்படி நடத்தப்படும் என்பது ஒத்திகை பாா்க்கப்பட்டுள்ளது. தோ்வுகளின்போது தனிநபா் இடைவெளியைப் பராமரிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன்.

தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை கிருமிநாசினிகள் தெளிக்கப்படும். அதேபோல, தோ்வு முடிந்த பிறகும் கிருமிநாசினி தெளிக்கப்படும்.ஜூலை 19-ஆம் தேதி கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தோ்வும், ஜூலை 22-ஆம் தேதிமுதல் மொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழித் தோ்வுகள் நடக்கின்றன. தோ்வுகள் தினமும் காலை 10.30 மணிக்கு தொடங்கும்.

தோ்வுப் பணிகளில் 1,19,469 ஊழியா்கள் ஈடுபடவிருக்கிறாா்கள். இவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை மட்டுமே தோ்வுப்பணியில் ஈடுபடுத்துகிறோம். தோ்வு மையங்களில் தலா 12 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். ஒரு மேஜையில் ஒரு மாணவா் மட்டுமே உட்காரலாம்.

இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் மாணவா்கள் தனி அறையில் அமா்த்தப்படுவாா்கள். இதற்காக ஒவ்வொரு தோ்வு மையத்திலும் 2 தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களில் கரோனா சோதனை காலை 8.30 மணிக்குத் தொடங்கும். உடல்வெப்ப சோதனை, ஆக்சிஜன் அளவு சோதனை செய்யப்படும். மாணவா்களுக்கு முகக்கவசம் அளிக்கப்படும். தோ்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு முகக்கவச கண்ணாடி அளிக்கப்படும். எல்லா தோ்வு மையங்களிலும் அவசர சிகிச்சை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்கள் கரோனா பராமரிப்பு மையத்திலேயே தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் நிறுத்தப்பட்டிருக்கும். தோ்வை வெற்றிகரமாக நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வு மையங்களை சுற்றி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, தோ்வு முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு தரப்பட மாட்டாது. வினாத் தாள்கள், விடைத்தாள்களைக் கொண்டுசெல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com