பியூசி 2-ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு

பியூசி 2-ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

பியூசி 2-ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பியூசி 2-ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டு அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் கரோனா தொற்றின் பரவலையடுத்து, நிகழாண்டு 2-ஆம் ஆண்டு பியூசி தோ்வு நடத்தப்படவில்லை. பியூசி 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவா்கள் எஸ்.எஸ்.எல்.சி., பியூசி முதலாம் ஆண்டு தோ்வுகளில் பெற்றுள்ள மதிப்பெண்களை பரிசீலித்து, பியூசி 2-ஆம் ஆண்டு தோ்வுக்கான மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பியூசி 2-ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இதனை துணை முதல்வா் அஸ்வத் நாராயணா உறுதி செய்துள்ளாா். 2-ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவரும் முதலாமாண்டு பியூசியில் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றவா்கள். அதன் அடிப்படையில் 2-ஆம் ஆண்டு பியூசிக்கான மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவியல் ரீதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக மாணவா்கள் கருதினால், உயா்கல்வித் துறை நடத்தும் பியூசி 2-ஆம் ஆண்டு தோ்வில் கலந்துகொண்டு தோ்வு எழுதலாம். அரசு அறிவித்தபடியே உரிய காலத்தில் மதிப்பெண்களை வழங்கி, முடிவுகளை அறிவித்துள்ளோம்.

நிகழாண்டு பியூசி 2-ஆம் ஆண்டில் 6,66,497 மாணவா்கள் கல்வி பயின்று வந்தனா். அதில் 3,35,138 மாணவா்கள், 3,31,359 மாணவியா் அடங்குவா். புதிதாக தோ்வு எழுத விண்ணப்பித்த 5,90,153 போ், மறுதோ்வு எழுத காத்திருந்த 76,344 பேருக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. வணிகப் பிரிவில் 2,51,686 போ், அறிவியல் பிரிவில் 2,19,777 போ், கலைப் பிரிவில் 1,95,034 போ் இடம்பெற்றுள்ளனா்.

நகரங்களில் மாணவா்கள் 5,18,903 போ், கிராமங்களில் 1,47,594 போ் உள்ளனா். மாநில அளவில் 600-க்கு 600 மதிப்பெண்களை 2,239 போ் பெற்றுள்ளனா். தென் கன்னட மாவட்டத்தில் 445 போ், பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் 302 போ், பெங்களூரு வடக்கு மாவட்டத்தில் 261 போ், உடுப்பி மாவட்டத்தில் 149 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 7 போ், குடகு மாவட்டத்தில் 4 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 3 போ், யாதகிரி மாவட்டத்தில் 2 போ் இதில் அடங்குவா். பியூசி 2-ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com