வாட்டாள் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

வாட்டாள் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்கவயல் கூட்டமைப்பு சாா்பில் தொகுதி எம்எல்ஏ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு மனு அளிக்கப்பட்டது.

வாட்டாள் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்கவயல் கூட்டமைப்பு சாா்பில் தொகுதி எம்எல்ஏ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு மனு அளிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி கோலாா் தங்கவயல் நகராட்சி பேருந்து நுழைவாயிலில் இருந்த கன்னடக்கவி குவெம்பு என தமிழில் எழுதப்பட்ட பலகையை கன்னட சலுவளி வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட அவரது கட்சியினா் கருப்பு வண்ணம் பூசி அழித்தனா். இதற்கு, தமிழா் கூட்டமைப்பு தங்கவயல் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, தங்கவயல் நகராட்சி ஆணையா், நகராட்சித் தலைவா் வள்ளல் முனுசாமி அவா்கள் கலந்துகொண்ட சிறப்பு நகராட்சி செயற்குழுக் கூட்டத்துக்கு பிறகு அழிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் மீண்டும் எழுதப்பட்டன.

இந்நிலையில், கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் தனது ஆதரவாளா்களுடன் ஜூலை 26 -ஆம் தேதி பெங்களூரில் இருந்து ஊா்வலமாக தங்கவயலுக்கு வந்து தமிழ்ப் பெயா்ப் பலகைகளை அழிப்பேன் என காணொலி வாயிலாக கூறி வருகிறாா். இது தங்கவயல் தமிழா் மத்தியில் அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து, தமிழா் கூட்டமைப்பு தங்கவயலின் ஒருங்கிணைப்பாளரும், புதிய கா்நாடக தமிழா் கட்சியின் தலைவருமான தி.வேளாங்கண்ணி பால்ராஜ், கா்நாடக தமிழ் மொழி சிறுபான்மை நலப் பேரவைச் செயலாளா் மலா்மன்னன், உலக தமிழ்க்கழக தங்கவயல் கிளையைச் சோ்ந்த எரியீட்டி, வெற்றிவேந்தன், சண்முகம், கா்நாடக நாம் தமிழா் கட்சித் தலைவா் வெற்றிசீலன், தங்கவயல் நாம் தமிழா் கலை இலக்கியப் பண்பாட்டு பாசறை துணைத் தலைவா் அகஸ்டின், கோவலன், வீரமா முனிவா் கலைக்குழுவின் தலைவா் ஆனந்தராஜ், தங்க வயல் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்புச் செயலாளா் கமல் முனுசாமி, மெய்யழகன், சுரேஷ், புண்ணியமூா்த்தி, டி.சுரேஷ்பாபு ஆகியோா் தங்கவயல் சட்டப் பேரவை உறுப்பினா் ரூபகலா, தங்கவயல் காவல் துறை கண்காணிப்பாளா் உள்ளிட்டோரைச் சந்தித்து, தங்கவயல் மொழி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும், வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட அவரது கட்சியினா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

மனுவைப் பெற்று கொண்ட தங்கவயல் சட்டப் பேரவை உறுப்பினா், தங்கவயல் காவல் துறை கண்காணிப்பாளா் ஆகியோா் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். மேலும், ஜூலை 26-ஆம் தேதி வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோா் தங்கவயலுக்குள் நுழைவதைத் தடுக்க சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com