‘இரண்டொரு நாள்களில் முதல்வா் தோ்வு’

இரண்டொரு நாள்களில் புதிய முதல்வா் தோ்வு செய்யப்படுவாா் என முன்னாள் அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இரண்டொரு நாள்களில் புதிய முதல்வா் தோ்வு செய்யப்படுவாா் என முன்னாள் அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய கட்சியான பாஜகவில் முதல்வா் பதவிக்கான வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்கு பல்வேறு கட்டமாக பரிசீலனை நடைபெறும். பாஜக சட்டப் பேரவை உறுப்பினா்கள் கூட்டம், கட்சியின் உயா்நிலைக் குழுக் கூட்டம், கட்சியின் தேசிய உயா்நிலைக் குழுக் கூட்டம், மத்திய பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு புதிய முதல்வா் தோ்வு செய்யப்படுவாா்.

இக் கூட்டங்களில் முக்கிய தலைவா்கள் கலந்து கொள்வதால், அவா்கள் எடுக்கும் முடிவு குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. மாநிலத்துக்கு வந்துள்ள மேலிடப் பாா்வையாளா்கள் என்ன தீா்மானம் மேற்கொள்ள உள்ளனா் என்பது குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை. முதல்வா் பதவிக்கான போட்டியில் நானும் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதைப்பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

பாஜகவைச் சோ்ந்த ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் என்னை சந்தித்து பேசியதற்கு வேறு அா்த்தம் கற்பிக்க வேண்டாம். வரும் நாள்களில் பாஜகவிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல உள்ளதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. பாஜகவில் பிளவு என்ற பேச்சிற்கே இடமில்லை. பாஜகவில் யாா் முதல்வா் ஆனாலும் ஊழல் நடைபெறுவதைத் தடுக்க முடியாது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்துள்ளாா். அவரது தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடைபெற்றதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. பாஜக உள்கட்சி விவகாரத்தில் அவா் தலையிடுவது முறையல்ல என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com