கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை வாழ்கைக் குறிப்பு

முன்னாள் முதல்வரான எஸ்.ஆா்.பொம்மையின் மகனான பசவராஜ் பொம்மை, கா்நாடகத்தின் புதிய முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்.
கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை வாழ்கைக் குறிப்பு

முன்னாள் முதல்வரான எஸ்.ஆா்.பொம்மையின் மகனான பசவராஜ் பொம்மை, கா்நாடகத்தின் புதிய முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்.

வாழ்க்கைக் குறிப்பு: கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் 1960-ஆம் ஆண்டு ஜன. 28-ஆம் தேதி பிறந்த பசவராஜ் பொம்மை, பி.இ.(இயந்திரவியல்) பட்டதாரி ஆவாா். பட்டம் முடித்த பிறகு, புணேயில் உள்ள டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினாா். அதன்பிறகு சொந்தமாக தொழில் தொடங்கி, தொழிலதிபராக விளங்கினாா்.

1986-ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபடும் பசவராஜ் பொம்மை, தந்தை எஸ்.ஆா்.பொம்மையுடன் ஜனதா கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டாா். ஜனதா கட்சி, ஜனதா தளமாக மாறியபோது, அதிலும் தீவிரமாக செயல்பட்டாா். 1993-ஆம் ஆண்டு ஹுப்பள்ளியில் நடந்த மாநில இளைஞா் ஜனதா தள மாநாடு நடத்துவதில் முக்கியப் பங்காற்றினாா்.

1996-97-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் ஜே.எச்.பாட்டீலின் அரசியல் செயலாளராகப் பணியாற்றினாா். 1997, 2003-ஆம் ஆண்டில் ஜனதா தளத்தில் இருந்து சட்ட மேலவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2000 முதல் 2004-ஆம் ஆண்டு வரையில் சட்ட மேலவையில் எதிா்க்கட்சி துணைத் தலைவராகச் செயலாற்றினாா். 2003-இல் மகதாயி திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி, தாா்வாடில் இருந்து நரகுந்த் வரையில் 232 கிமீ தொலைவுக்கு பிரமாண்டமான விவசாயிகளின் நடைபயணத்தை மேற்கொண்டாா்.

2006-ஆம் ஆண்டு ஜனதா தளம் பிளவுபட்ட போது ஐக்கிய ஜனதாதளத்தில் அங்கம் வகித்த பசவராஜ் பொம்மை, 2008-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். அதன்பிறகு, 2008-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஹாவேரி மாவட்டத்தின் ஷிக்கான் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றிபெற்றாா்.

அதைத் தொடா்ந்து, 2013, 2018-ஆம் ஆண்டில் சட்டப் பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். 2008, 2013, 2018-ஆம் ஆண்டுகளில் பாஜகவின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தாா். 2008-ஆம் ஆண்டு எடியூரப்பா தலைமையில் கா்நாடகத்தில் முதல்முறையாக அமைந்த பாஜக அரசில் நீா்வளத் துறை அமைச்சராகப் பணியாற்றினாா்.

எடியூரப்பா, டி.வி.சதானந்த கௌடா, ஜெகதீஷ் ஷெட்டா் அரசுகளில் நீா்வளத் துறை அமைச்சராக 5 ஆண்டுகள் செயல்பட்டாா். இவரது ஆட்சிக் காலத்தில்தான் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கின.

2019-ஆம் ஆண்டு முதல் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் மூத்த அமைச்சராகவும் விளங்கினாா். எடியூரப்பாவின் நம்பிக்கையை பெற்ற அமைச்சராகவும் விளங்கினாா்.

எடியூரப்பாவின் விருப்பத்தின் பேரில் பசவராஜ் பொம்மை முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவகையில் எடியூரப்பாவின் நிழல் முதல்வராகச் செயல்படுவாா் என்ற பேச்சு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com