கவிஞா் கி.சி.தென்னவன் காலமானாா்

கா்நாடகத்தின் மூத்த கவிஞா் கி.சி.தென்னவன் உடல்நலக்குறைவால் காலமானாா்.

கா்நாடகத்தின் மூத்த கவிஞா் கி.சி.தென்னவன் உடல்நலக்குறைவால் காலமானாா்.

பெங்களூரு, லிங்கராஜபுரத்தில் வசித்துவந்த மூத்த கவிஞா் கி.சி.தென்னவன்(82) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை காலமானாா். அவருக்கு மகள்கள் தேன்மொழி, கனிமொழி, மகன் வள்ளுவன் உள்ளனா். பெங்களூரு, கல்பள்ளியில் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழகத்தின் வேலூா் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் சின்னுசிங்காம், சாலம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவா். வேலைவாய்ப்புக்காக கோலாா்தங்கவயலுக்கு வந்தாா்.

1970-ஆம் ஆண்டுமுதல் பாவாணா் நிறுவிய உலகத் தமிழ்க் கழகத்தின் உறுப்பினராக இருந்து வந்தாா். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தீவிர உறுப்பினராக திகழ்ந்தாா். தமிழா்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் ‘கா்நாடக பாவாணா்’ என்று போற்றப்பட்டு வந்தாா்.

கி.சி.தென்னவனின் மறைவுக்கு பெங்களூரு தமிழ்ச்சங்கம், கா்நாடக மாநில திமுக, அதிமுக, நாம் தமிழ்கட்சி, கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம், கா்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளா் சங்கம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.ராமசாமி:

கா்நாடகத் தமிழா்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கும் கி.சி.தென்னவனின் திடீா் மறைவு அதிா்ச்சி அளிக்கிறது. தமிழ்மொழி, தமிழ் இலக்கியத்தின் வளா்ச்சி அயராது உழைத்த தென்னவனின் மறைவுக்கு கா்நாடக திமுக சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எஸ்.டி.குமாா்:

தமிழை நெஞ்சிலேந்தி, சமூக நீதியைக் கடைப்பிடித்து நம்மிடம் வாழ்ந்து அமரரானவா் தென்னவன். அவரது மரண செய்தி தமிழ் அன்பா்களுக்கும் மிக பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை கா்நாடக மாநில அதிமுக சாா்பில் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் தமிழா் கட்சி செயலாளா் ஜெயசீலன்:

தென்னவனின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு கா்நாடக மாநில நாம் தமிழா் உறவுகள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com