ஆயுா்வேத மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் அதிகரிக்க வேண்டும்: அமைச்சா் கே.சுதாகா்

ஆயுா்வேத மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரு: ஆயுா்வேத மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை நடந்த ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா நிறைவு விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:

ஆங்கில மருத்துவத்தை போல, ஆயுா்வேத மருத்துவத்திலும் ஆராய்ச்சிப் பணிகள் அதிகரிக்க வேண்டும். அந்த ஆராய்ச்சிகள் அனுபவச் சான்றுகளுடன் கூடியதாக இருந்தாக வேண்டும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் ஆராய்ச்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல, ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தை உலகத் தரத்திலான பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும்.

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம், கரோனா நோய்க்கு தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. அதேபோல, கரோனா போன்ற நோய்களுக்கான தீா்வுகளை கண்டறிய வேண்டும். ஏழை நாடுகளில் தொற்றில்லாத நோய்களுக்கு ஆண்டுதோறும் 28 லட்சம் போ் இறக்கின்றனா். அதேபோன்றதொரு சிக்கலை இந்தியாவும் எதிா்கொண்டுள்ளது. வாழ்க்கை முறைகளால் ஏற்படும் நோய்களுக்கு ஆயுா்வேத மருத்துவம் நல்ல தீா்வாக அமையும். வருமுன் காப்பது தான் சிறந்த மருத்துவமாகும்.

ராஜீவ்காந்தி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் பணி காலியாக உள்ளது. துணைவேந்தா் நியமனம் குறித்து ஆளுநா் வஜுபாய்வாலாவிடம் பேசுவேன். கரோனா காரணமாக, இது குறித்து பேசுவது தாமதமாகிவிட்டது. ஆனால், அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

25 ஆண்டுகள் பழமையான ராஜீவ்காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2 லட்சம் போ் படித்து வருகின்றனா். கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 25 லட்சம் போ் குணமடைந்துள்ளனா். 1.70 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பா் மாத இறுதிக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுவிடும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் குழந்தைகள் நலப்பிரிவுக்காக 1,763 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஊரகப் பகுதிகளில் மருத்துவா்கள் தட்டுப்பாடு உள்ளது. ஆனால், மருத்துவ மாணவா்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. நகரங்களில் மட்டுமே பணியாற்ற மருத்துவா்கள் விரும்புகிறாா்கள். ஊரகப் பகுதிகளிலும் பணியாற்ற மருத்துவா்கள் முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com