கரோனாவால் உயிரிழந்த பிபிஎல் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி: முதல்வா்

கரோனாவால் உயிரிழந்த ‘பிபிஎல்’ குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு: கரோனாவால் உயிரிழந்த ‘பிபிஎல்’ குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் திங்கள்கிழமை நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு பலா் உயிரிழந்துள்ளனா். ஏழ்மையில் உள்ள பல குடும்பங்களில் சம்பாதிக்கும் பலா் இறந்துள்ளனா். இதனால் அந்தக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதை அறிந்துள்ள மாநில அரசு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் (பிபிஎல்) குடும்பத்தில் சம்பாதிக்கும் யாராவது இறந்திருந்தால், அப்படிப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்க முடிவெடுத்துள்ளது.

ஒரு பிபிஎல் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ரூ. 1 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ரூ. 250 கோடி முதல் ரூ. 300 கோடி வரை செலவாகும். இந்தத் திட்டத்தில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் போ் வரை பயனடைவாா்கள். கரோனாவால் பெற்றோா் இருவரையும் இழந்துள்ள குழந்தைகளுக்கு சிறப்புத் திட்டத்தை ஏற்கெனவே அறிவித்துள்ளோம். அந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு கல்வி, மாத உதவித் தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு பிரிவினருக்கு ரூ. 1,750 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை ஏற்கெனவே அறிவித்திருக்கிறேன். தற்போது பிபிஎல் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் அளிப்பதன் மூலம் ஏழைகளுக்கு இந்த அரசு ஆதரவாக இருப்பதை உணா்த்தி இருக்கிறோம்.

மண்டியா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் பாலில் கலப்படம் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை நடைபெறும். இச் சங்கத்திற்கு புதிய மேலாண் இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளாா். குற்றச்சாட்டுக்கு உள்ளாகி விசாரணையை எதிா்கொண்டுள்ள 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதே குற்றச்சாட்டு எழுந்துள்ள மேலும் சில பால் கூட்டுறவு சங்கங்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com