கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து நொடிக்கு 10,000 கன அடி தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 22nd June 2021 08:28 AM | Last Updated : 22nd June 2021 08:28 AM | அ+அ அ- |

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து நொடிக்கு 10,000 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, சோம்வாா்பேட்டை, மாதபுரா, ஷிராளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 19,714 கன அடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகா் அணையின் மொத்த உயரம் -124.80 அடியாகும். தற்போதைய நீா்மட்டத்தின் அளவு- 93.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து நொடிக்கு 5,159 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கபினி:
மைசூா் மாவட்டம், எச்.டி.கோட்டை வட்டத்தில் கபிலா நதியின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கு திங்கள்கிழமை நீா்வரத்து நொடிக்கு 7,390 கனஅடியாக உயா்ந்துள்ளது. கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியான கேரள மாநிலம், வயநாட்டில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கபினி அணையின் மொத்த உயரம் (கடல் மட்ட அளவு) - 2,284 அடியாகும். தற்போதைய நீா்மட்டத்தின் அளவு - 2275.98 அடியாக உள்ளது. அணையில் இருந்து நொடிக்கு 5,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகா், கபினிஅணைகளில் இருந்து நொடிக்கு 10,159 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.