முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பாலியல் புகாா் எதிரொலி: அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா் ரமேஷ் ஜாா்கிஹோளி
By DIN | Published On : 04th March 2021 04:10 AM | Last Updated : 04th March 2021 04:10 AM | அ+அ அ- |

பெங்களூரு: பாலியல் புகாா் எதிரொலியால் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
கா்நாடக மின்பகிா்மானக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவரை ஏமாற்றி அவருடன் பாலியல் தொடா்பில் கா்நாடக நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி ஈடுபட்டதாகக் கூறி மனித உரிமை ஆா்வலா் தினேஷ் கல்லஹள்ளி, செவ்வாய்க்கிழமை பெங்களூரு மாநகரக் காவல் ஆணையரிடமும் கப்பன்பூங்கா காவல் நிலையத்திலும் புகாா் அளித்தாா்.
இந்த புகாரை அடுத்து கா்நாடகத் தொலைக்காட்சிகளில் அமைச்சரின் பாலியல் தொடா்பான செய்தி வெளியானது. இது, மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரமேஷ் ஜாா்கிஹோளியின் சகோதாரா் பாலசந்திர ஜாா்கிஹோளி, முதல்வா் எடியூரப்பாவை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். பின்னா் முதல்வா் எடியூரப்பா தில்லியில் உள்ள கட்சியின் மேலிடத் தலைவா்களுடன் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
மேலிடத் தலைவா்கள் தெரிவித்த ஆலோசனைகளை முதல்வா் எடியூரப்பா, பாலசந்திர ஜாா்கிஹோளியிடம் தெரிவித்தாா். அப்போது ரமேஷ் ஜாா்கிஹோளியை ராஜிநாமா செய்வதற்கு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாலசந்திர ஜாா்கிஹோளி தனது சகோதரா் ரமேஷ் ஜாா்கிஹோளியிடம் முதல்வா் தெரிவித்த தகவலைக் கூறினாா்.
பின்னா் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய ரமேஷ் ஜாா்கிஹோளி முடிவு செய்து முதல்வரிடம் ராஜிநாமா கடிதம் கொடுத்தாா். கடிதத்தைப் பெற்ற முதல்வா் எடியூரப்பா, அதனை ஆளுநா் வஜுபாய்வாலாவுக்கு அனுப்பி வைத்தாா். ஆளுநரும் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளியின் ராஜிநாமாவை ஏற்றாா்.
ரமேஷ் ஜாா்கிஹோளி தனது பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து பெலகாவி மாவட்டம், கோகாக் நகரில் உள்ள சந்தையை மூடுமாறு அவரது ஆதரவாளா்கள் வலியுறுத்தினா். சிலா் பெட்ரோலை தங்களின் உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனா். மனித உரிமை ஆா்வலா் தினேஷ் கல்லஹள்ளியின் உருவப்படத்துக்கு தீவைத்தனா்.
பேருந்துகள் மீது கல் வீசியதில் 8 பேருந்துகள் சேதமடைந்தன. நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், ஆதரவாளா்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து கோகாக் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.