பெங்களூரின் வளா்ச்சிக்கு ‘பெங்களூரு புதுப்பொலிவு’ திட்டம்

பெங்களூரின் வளா்ச்சிக்கு ‘பெங்களூரு புதுப்பொலிவு’ திட்டம் கொண்டு வரப்படும் என மாநில நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதல்வா் எடியூரப்பா அறிவித்தாா்.

பெங்களூரின் வளா்ச்சிக்கு ‘பெங்களூரு புதுப்பொலிவு’ திட்டம் கொண்டு வரப்படும் என மாநில நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதல்வா் எடியூரப்பா அறிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை திங்கள்கிழமை தாக்கல் செய்து அவா் கூறியதாவது:

சா்வதேச அளவில் வேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. எனவே, இதன் ஒருங்கிணைந்த வளா்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசு வீட்டுவசதித் துறை வெளியிட்டுள்ள வாழ்வதற்கு சிறந்த நகரங்களில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. பெங்களூரின் வளா்ச்சிக்கு ‘பெங்களூரு புதுப்பொலிவு’ திட்டம் கொண்டு வரப்படும்.

இந்தத் திட்டத்தில் எளிதான போக்குவரத்து வசதி, அறிவியல் ரீதியான திடக்கழிவு மேலாண்மை, பசுமைப் படலம் விரிவாக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். பெங்களூரில் வசிப்பவா்களுக்கு சிறந்த முறையில் சுகாதாரம், கல்வி வழங்கப்படும்.

மல்லேஸ்வரம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள மைசூரு லேம்ப் வளாகத்தில் பெங்களூரு அனுபவம் மையம் உருவாக்கப்படும். இந்த மையம் கா்நாடகத்தின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். பைப்பனஹள்ளி என்.ஜி.இ.எஃப்.புக்கு சொந்தமான 105 ஏக்கா் நிலத்தில் கா்நாடகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மரங்களின் பூங்கா உருவாக்கப்படும். அங்குள்ள கட்டடங்களில் தொழில், பாரம்பரிய, கலாசாரம் வெளிப்படுத்தும் மையம் அறிமுகப்படுத்தப்படும்.

2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 65 கி.மீ. நீளம், 100 மீ. அகல வெளிவட்டச் சாலை பணிகள், நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால் நிறுத்தப்பட்டன. இப் பணிகளை தனியாரின் பங்களிப்புடன் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 2022-21 நிதியாண்டில் புகா் ரயில் பாதை பணிகள் ரூ. 15,767 கோடியில் ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சா்வதேச விமான நிலையத்தில் 2-ஆம் கட்ட ஓடுதளம் அமைக்கும் பணிகள் ரூ. 2,708 கோடியில் நிறைவடைந்து, அங்கு விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ரூ. 4,751 கோடியில் கட்டடங்கள் கட்டும் பணி நிகழாண்டு நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு கூடுதல் ரயில் சேவை வழங்கும் விதமாக யஸ்வந்தபுரம்-சென்னசந்திரா, பைப்பனஹள்ளி-ஒசூா் இடையே உள்ள பாதைகளை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் 50 சதவீத நிதி உதவியுடன், ரூ. 813 கோடியில் இந்த வளா்ச்சிப் பணி செயல்படுத்தப்படும்.

கோரமங்களா ராஜகால்வாய் ரூ. 169 கோடியில் மேம்படுத்தப்பட்டு, அங்கு ஓடும் மழை வெள்ளத்தை, தூய நீராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு வாசிகள் ஓய்வுநேரத்தைக் கழிக்க 3 மரப் பூங்காக்கள் அமைக்கப்படும். அதில் இயற்கையை அனுபவிக்கும் வகையிலான ஓடுபாதை, சிறுவா்கள் விளையாடுவதற்கான திடல், குடிநீா் வசதி உள்ளிட்டவை அமைக்கப்படும்.

ரூ. 168 கோடியில் சா்வதேச கெம்பேகௌடா விமான நிலையத்தில் சா்வதேசத் தரத்திலான வா்த்தகப் பூங்கா அமைக்கப்படும். கோலாா் மாவட்டத்துக்கு நீா் பாய்ச்சும் கே.சி. நீா் பள்ளத்தாக்கு திட்டத்தை மேம்படுத்த ரூ. 450 கோடியில் பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், பெங்களூரு மாநகராட்சி ஆகியோருடன் ஒன்றிணைந்து வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஒரு ரூபாயில் வருவாய்

மாநில வரிவருவாய் - 50 பைசா

கடன் - 29 பைசா

மத்திய அரசு மானியம் -6 பைசா

மத்திய வரி பங்கு - 10 பைசா

மாநில வரிசாரா வருவாய் - 3 பைசா

பொதுக் கணக்கு - 2 பைசா

செலவினம்

ஊதியம், படிகள் - 21 பைசா

மூலதன செலவினம் - 17 பைசா

இதர வருவாய் செலவினம் - 16 பைசா

கடன் சேவைகள் - 18 பைசா

மானியங்கள் - 10 பைசா

ஓய்வூதியம் - 10 பைசா

ஜிஐஏ மற்றும் நிதி உதவி - 4 பைசா

சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள் - 3 பைசா

நிா்வாகச் செலவினம் - 1 பைசா

மாநில வரிவருவாய்

வணிகவரி-ரூ. 76,473கோடி(62%)

மாநில கலால் வரி-ரூ. 24,580கோடி (20%)

முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு- ரூ. 12,655 கோடி (10%)

மோட்டாா் வாகன வரி-ரூ. 7,515 கோடி (6%)

இதர வரிகள்- ரூ.2,979 கோடி (2%)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com