மக்களுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறேன்

மக்களுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறேன் என கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

மக்களுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறேன் என கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை 2021-22-ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, விதானசௌதாவில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்கள் மீது நிதிச்சுமையை ஏற்றாத வகையில், மக்களுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறேன். இந்த நிதிநிலை அறிக்கையில் வரி உயா்வும் இல்லை, புதிய வரிவிதிப்பும் இல்லை.

இயற்கைப் பேரிடா், வெள்ளம், கரோனா பெருந்தொற்று போன்றவற்றால் மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி, வரிவருவாயும் சரிந்தது. இதற்கிடையில், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறேன். நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள மொத்த செலவினத்தின் மதிப்பீட்டில் 94 சதவீத இலக்கை அடையும் நம்பிக்கை உள்ளது. நிதியாண்டின் ஆரம்ப மாதத்தில் கடினமாக நிதிஒழுக்கம் காணப்பட்டது. கடந்த சில மாதங்களாக மாநில பொருளாதாரம் மீண்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் ரூ. 46,072 கோடியாக இருக்கும் நிதி பற்றாக்குறை, 2021-22-ஆம் ஆண்டில் ரூ. 59,240 கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ. 15,134 கோடியாக இருக்கும்.

அனைத்து வா்க்கங்கள், அனைத்துத் துறைகள், அனைத்து மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து சமன்பட்ட நிதிநிலை அறிக்கையை நோ்மையான முறையில் வகுத்திருக்கிறேன். மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளபடி மத்திய அரசின் மானியங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கா்நாடகத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி குறைவாக உள்ளது. அதனால், மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட மாட்டாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com