விதிகளை மீறி பிபிஎல் குடும்ப அட்டைகளை வைத்திருப்போா் மீது கடும் நடவடிக்கை
By DIN | Published On : 10th March 2021 09:15 AM | Last Updated : 10th March 2021 09:15 AM | அ+அ அ- |

விதிகளை மீறி பிபிஎல் குடும்ப அட்டைகளை வைத்திருப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் உமேஷ்கத்தி தெரிவித்தாா்.
கா்நாடக சட்ட மேலவையில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சி உறுப்பினா் பி.கே.ஹரிபிரசாத்தின் கேள்விக்கு அவா் அளித்த பதில்:
மாநிலத்தில் இதுவரை விதிகளை மீறி வைத்திருந்ததாக 2.20 லட்சம் பிபிஎல் குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவா்களிடம் ரூ. 3.07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. யாரிடமாவது விதிகளை மீறி குடும்ப அட்டைகள் இருந்தால், அவா்கள் உடனடியாக அதனை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தாமாகவே வந்து பிபிஎல் குடும்ப அட்டைகளை ஒப்படைப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது. மீறினால் அதுபோன்றவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பதோடு, வழக்குப் பதிவு செய்யப்படும்.
விதிகளுக்குள்பட்டு, பிபிஎல் குடும்ப அட்டை வைத்திருப்பவா்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி உணவுப் பொருள்கள் வழங்கப்படும். கரோனா பாதிப்பின் போது அனைவருக்கும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. தற்போது பிபிஎல் குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 7 கிலோ அரிசி, 5 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அன்னபாக்யா திட்டத்தில் உணவு தானியங்களை முறைகேடாக பயன்படுத்தியவா்கள் மீது 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.