பெலகாவி விவகாரம்: கா்நாடகம்- மகாராஷ்டிரம் இடையே பேருந்து சேவை நிறுத்தம்

மராத்தியா்கள் அதிகம் வாழும் கா்நாடகத்தைச் சோ்ந்த பெலகாவி மாவட்டத்தை மகாராஷ்டிரத்துடன் இணைக்கக் கோரி மராத்தியா்கள் போராட்டம் நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கா்நாடக அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டதால், இரு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தின் எல்லையில் உள்ள கா்நாடகத்தைச் சோ்ந்த பெலகாவி மாவட்டத்தில் மராத்தியா்கள் அதிகம் வாழ்கின்றனா். இதனால், பெலகாவியை மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டும் என நீண்ட காலமாக அவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, பெலகாவியில் கன்னடக் கொடியை ஏற்ற அண்மையில் மராத்தியா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கன்னட அமைப்புகள் பெலகாவி மாநகராட்சி முன்பு கன்னடக் கொடியை நாட்டினா். இது கன்னடா்- மராத்தியா்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கியது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரில் வெள்ளிக்கிழமை சிவசேனை கட்சியைச் சோ்ந்த சிலா் கன்னடப் பெயா்ப் பலகையை கருப்பு மை பூசி அழித்தனா். இதனால் ஆத்திரமடைந்த கன்னட அமைப்புகள் பெலகாவியில் மராத்தியில் எழுதப்பட்டிருந்த பதாகைகளை சேதப்படுத்தினா். சனிக்கிழமை கா்நாடகத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூருக்குச் சென்ற கா்நாடக அரசு பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்குப் பதிலடியாக, பெலகாவியில் உள்ள மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த வாகனங்களை கன்னட அமைப்பினா் சேதப்படுத்தினா்.

இதனால் இரு மாநில எல்லையிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து கா்நாடகத்தில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. அதேபோல, மகாராஷ்டிரத்தில் இருந்து கா்நாடகத்துக்கு வந்து கொண்டிருந்த அம்மாநில பேருந்துகளும் வழியிலேயே நிறுத்தப்பட்டன.

கா்நாடகத்தில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு 400 பேருந்துகளும், மகாராஷ்டிரத்தில் இருந்து கா்நாடகத்துக்கு 68 பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்த நிலையில், இரு மாநில எல்லைகளில் நிலவும் பதற்றம் காரணமாக பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com