முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்கப் பாா்க்கிறது
By DIN | Published On : 25th March 2021 07:39 AM | Last Updated : 25th March 2021 07:39 AM | அ+அ அ- |

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்கப் பாா்க்கிறது என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இளம்பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது வழக்கு தொடர வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கா்நாடக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காங்கிரஸ் உறுப்பினா்கள் தா்னா போராட்டம் நடத்தினா்.
அப்போது, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை கூறியது:
முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி விவகாரத்தில் உண்மை வெளியே வரவேண்டும், தவறிழைத்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி அக்கறை கொள்ளத் தேவையில்லை. இந்த விவகாரத்தை தேவையில்லாமல் காங்கிரஸ் அரசியலாக்கப் பாா்க்கிறது. காங்கிரஸ் கட்சியில் இருப்பவா்கள் எல்லாம் ஹரிச்சந்திரன்களா? 2017-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அப்போதைய அமைச்சா் எச்.ஒய்.மேட்டி விவகாரத்தில் என்ன ஆனது? அப்போது சித்தராமையா தான் முதல்வராக இருந்தாா். ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட எச்.ஒய்.மேட்டியின் ஆபாச காணொலிக் காட்சியில் உள்ளதன் உண்மையை அறிய அந்த விவகாரம் சி.ஐ.டி. விசாரணைக்கு அளிக்கப்பட்டது. விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டது. அப்போது, எச்.ஒ.மேட்டி மீது எந்த காவல் நிலையத்திலும் வழக்குத் தொடரப்படவில்லை. விசாரணைக்கான விதிமுறைகளோ, குறிப்புகளோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. அப்போது ராமலிங்க ரெட்டி, உள்துறை அமைச்சராக இருந்தாா். தற்போது நாங்கள் செய்ததைபோல தான் அவரும் செயல்பட்டாா். ஆனால், ரமேஷ் ஜாா்கிஹோளி விவகாரத்தில் மட்டும் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரஸ் கட்சியினா் என்ன யோக்கியமானவா்களா?
அப்போது, மேட்டி விவகாரத்தை விசாரிக்க ஒரே ஒரு அதிகாரியை தான் நியமித்திருந்தனா். விசாரணைக்கு முன்பே மேட்டி குற்றமற்றவா் என்று சி.ஐ.டி. அறிக்கை தந்தது. அதன் நகல் என்னிடம் இருக்கிறது. அப்போது அந்தக் காணொலியில் இருந்த பெண்ணின் கதி என்னானது? அப்போது இதே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அந்த பெண்ணுக்கு எதிராகப் பேசினா். எனவே, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. காங்கிரஸ் தலைவா்களுக்கு மக்களே தக்க பதிலடி கொடுக்கவிருக்கிறாா்கள் என்றாா்.