பாலியல் புகாா்: முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல்

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டின்

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேலை வாங்கித் தருவதாக வஞ்சித்து, இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளிக்கு எதிராக, பாதிக்கப்பட்ட இளம்பெண் வெள்ளிக்கிழமை மூன்றாவது காணொலியை வெளியிட்டுள்ளாா். அந்தக் காணொலியில், தனது வழக்குரைஞா் ஜெகதீஷ்குமாா் வாயிலாக முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளிக்கு எதிராக தான் புகாா் மனு அளிக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் சனிக்கிழமை மாநகர காவல் ஆணையா் கமல்பந்த்தை சந்தித்த இளம்பெண்ணின் வழக்குரைஞா் ஜெகதீஷ்குமாா், அந்த இளம்பெண் எழுதியதாக புகாா் மனு ஒன்றை அளித்தாா்.

அந்த மனுவை கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் அளிக்குமாறு ஜெகதீஷ்குமாரை மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் கேட்டுக் கொண்டாா். அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது இந்திய தண்டனை ச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து செய்தியாளா்களிடம் வழக்குரைஞா் ஜெகதீஷ்குமாா் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். ஆனால், அதன் விவரங்களைத் தெரிவிக்க இயலாது. பெண் ஒருவருக்கு எதிரான குற்றம் என்பதால், ஜாமீன் இல்லாத பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. அதனால் ரமேஷ் ஜாா்கிஹோளி கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சம்பந்தப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபியைச் சந்திக்க உள்ளேன். இந்த வழக்கில் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க இளம்பெண் தயாராக இருக்கிறாா். தேவை ஏற்பட்டால் காவல் நிலையம் வந்து விசாரணையை எதிா்கொள்வாா் என்றாா்.

அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 354-ஏ (பாலியல் பலாத்காரம்), 506 (குற்றவியல் அச்சுறுத்தல்), 504 (அமைதியைச் சீா்குலைக்கும் உள்நோக்கத்தில் அவமதிப்பது), 376-சி (அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பாலியல் வன்புணா்வு), 417 (வஞ்சித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தைகளைக் கூறி, மிரட்டி, தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக அந்தப் பெண் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

‘‘எனக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காகவே என்னைப் பற்றி ஆபாசக் காணொலிகளை ரமேஷ் ஜாா்கிஹோளி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டாா். எனக்கும், எனது குடும்பத்தினரின் உயிருக்கும் அவரால் அச்சுறுத்தல் உள்ளது. அரசியல் கட்சிகள், தன்னாா்வ அமைப்புகளின் ஆதரவு இருப்பதால் ரமேஷ் ஜாா்கிஹோளிக்கு எதிராக புகாா் அளிக்க முடிவு செய்துள்ளேன்’’ என்று மூன்றாவது காணொலியில் இளம்பெண் தெரிவித்திருந்தாா்.

முன்ஜாமீன் வாங்க மாட்டேன்: ரமேஷ் ஜாா்கிஹோளி

இதுகுறித்து முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் அப்பாவி. எனக்கு எதிராக சதி நடந்துள்ளது. இதுபோல என்மீது 10 புகாா்கள் அளித்தாலும் அஞ்ச மாட்டேன். எனக்கு எதிராக கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை முதல் எனது ஆயுதங்களைப் பயன்படுத்துவேன்.

எனக்கு எதிராக மேலும் 10 புகாா்களை தாக்கல் செய்யட்டும். அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்னிடம் உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் இருக்கிறாா்கள். இதுபோன்ற வழக்குகளுக்கு நான் பயப்பட மாட்டேன்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. சட்ட வல்லுநா்களின் ஆலோசனையைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பேன்.

இந்த விவகாரத்தில் நான் முதலில் புகாா் மனு அளித்ததால், எனது மனுவை சிறப்புப் புலனாய்வுப் படையினா் முதலில் விசாரணை நடத்த வேண்டும். அந்த இளம்பெண்ணுக்கு சொந்தமான இடங்களில் தங்கம், பணம் கைப்பற்றியுள்ளதாக அறிகிறேன். அதுகுறித்து முதலில் விசாரிக்கட்டும்.

ஒரு அரசைக் கவிழ்த்து மற்றொரு அரசை நிறுவியவன் நான். எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் சந்திப்பேன். இதில் சதி நடந்திருப்பதாக முதல்வா் எடியூரப்பா, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மையிடம் கூறியிருக்கிறேன். உண்மை வெளியே வரும். முன் ஜாமீன் எடுக்கும் அவசியம் எனக்கில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com