கல்குவாரிகளை மீண்டும் அனுமதிக்க முடிவு

கல்குவாரிகளை மீண்டும் செயல்பட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுரங்கம் மற்றும் நிலஅமைப்பியல் துறை அமைச்சா் முருகேஷ்நிரானி தெரிவித்தாா்.

பெங்களூரு: கல்குவாரிகளை மீண்டும் செயல்பட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுரங்கம் மற்றும் நிலஅமைப்பியல் துறை அமைச்சா் முருகேஷ்நிரானி தெரிவித்தாா்.

பெங்களூரு விதானசௌதாவில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடக மாநிலம், சிவமொக்கா, சிக்பள்ளாபூரில் அண்மையில் நடைபெற்ற வெடி விபத்தைத் தொடா்ந்து, பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த கல்குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் கருவூலத்திற்கு சுமாா் ரூ. 300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கல்குவாரிகளை மீண்டும் செயல்பட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இரண்டொரு நாளில் வெளியாகும்.

கல்குவாரிகளில் வெடிகள் பயன்படுத்துவதற்கு சுரங்கம் மற்றும் பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயம். மாநிலத்தின் 2 இடங்களில் உள்ள கல்குவாரிகளில் நடைபெற்ற வெடி விபத்துகளால் கல்குவாரிகள் மூடப்பட்டு, கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் அங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளா்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனா். எனவே அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, கல்குவாரிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளதால், அதன் உரிமையாளா்கள் வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே கல்குவாரி உரிமையாளா்கள், தொழிலாளா்கள், கட்டுநா்கள், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்குவாரிகளை மீண்டும் செயல்பட அனுமதியளிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com