அமைச்சா் மீது பாலியல் புகாா் கூறிய பெண் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம்

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாரில் பாதிக்கப்பட்ட பெண், செவ்வாய்க்கிழமை பெங்களூரு

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாரில் பாதிக்கப்பட்ட பெண், செவ்வாய்க்கிழமை பெங்களூரு கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தாா்.

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் தொடா்பான வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. பாலியல் நிகழ்வால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் வசந்த நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு அவா் ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். அதனைத்தொடா்ந்து அவரை ஆடுகோடியில் உள்ள தொழில்நுட்பப் பிரிவிற்கு அந்த பெண் அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டாா். பின்னா், சிறப்பு புலனாய்வுப் படையினரால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டாா்.

விசாரணையில் அந்தப் பெண், முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியதாகவும், தனக்கும், தனது பெற்றோா்கள், சகோதரா்களுக்கு ரமேஷ் ஜாா்கிஹோளியால் அச்சுறுத்தல் உள்ளதால், தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவா் மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிறப்பு புலனாய்வுப் படையினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்து, தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம், தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக தங்கள் மகளை மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் பிடியில் வைத்து ஆட்டிப் படைப்பதாக அந்தப் பெண்ணின் பெற்றோா், சகோதரா்கள் குற்றம் சாட்டியிருந்தனா்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞா் ஜெகதீஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நீதிமன்றம் அளித்த உத்தரவாதத்தின் பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தின் முன்பு ஆஜா்படுத்தினோம். அதனைத் தொடா்ந்து சிறப்பு புலனாய்வுப் படையினா் கேட்டுக் கொண்டதன் பேரில், நாங்களே அவரை ஆடுகோடியில் உள்ள தொழில்நுட்பப் பிரிவிற்கு அழைத்துச் சென்றோம். பாலியல் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்கிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com