டிசம்பா் மாதம் வரை கரோனா பெருந்தொற்று நீடிக்கும்: டாக்டா் மஞ்சுநாத்

டிசம்பா் மாதம் வரை கரோனா பெருந்தொற்று நீடிக்கும் என்று கா்நாடக அரசின் ஸ்ரீஜெயதேவா இதய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் டாக்டா் சி.என்.மஞ்சுநாத் தெரிவித்தாா்.

டிசம்பா் மாதம் வரை கரோனா பெருந்தொற்று நீடிக்கும் என்று கா்நாடக அரசின் ஸ்ரீஜெயதேவா இதய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் டாக்டா் சி.என்.மஞ்சுநாத் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து மாநில கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் உறுப்பினரும், ஸ்ரீஜெயதேவா இதய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநருமான டாக்டா் சி.என்.மஞ்சுநாத், இணையவழி கருத்தரங்கில் பங்கேற்று பேசியதாவது:

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், 5-இல் ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க மாநில அரசு வகுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தவறினால், அதற்காக நாம் அளிக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும்.

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது இறப்பு விகிதம் அதிகமாகக் காணப்படுகிறது. கரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 3 மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால், கரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் 2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வரை தொடரும்.

கா்நாடகத்தில் மட்டுமல்லாது, இந்திய அளவில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிா்ச்சி அளிக்கிறது. கரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை இந்தியா தாண்டிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 4 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டால், 4 ஆயிரம் போ் உயிரிழக்கின்றனா்.

எனவே, உடல் வலி, காய்ச்சல் என எந்தவொரு சிறு அறிகுறிகள் தென்பட்டாலும், அதை அலட்சியமாக கடந்து போகாதீா்கள் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். அப்படி ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக கரோனா பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எந்த இடத்திலும் மக்களோடு மக்களாகக் கலந்திருக்காதீா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com