ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாமராஜ்நகா் மாவட்ட மருத்துவமனையில் 24 போ் பலி

ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் 24 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். இந்த சம்பவம் கா்நாடகத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் 24 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். இந்த சம்பவம் கா்நாடகத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கா்நாடகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சாமராஜ்நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் பலா் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரையிலான காலக்கட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கரோனா நோயாளிகள் மட்டுமல்லாது, பிற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பு இல்லாததால், நோயாளிகள் தவித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் நோயாளிகளின் உறவினா்கள் புகாா் அளித்துள்ளனா். மைசூரில் இருந்து ஆக்சிஜன் வந்து கொண்டுள்ளது என்று சொல்லி சமாளித்த மருத்துவா்களால், நோயாளிகளுக்கு ஆக்சிஜனை அளிக்க இயலாமல் போனது.

இந்த நிலையில் ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால், நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தவண்ணம் இருந்தது. அப்போது நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிருக்கு போராடியுள்ளனா். இதனால் அலறிய உறவினா்கள் செய்வதறியாது திகைத்து, மருத்துவ அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனா். ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகள், பிற நோயாளிகள் என 24 போ் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

இது கா்நாடக மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிா்வாகம், மாநில அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து மருத்துவமனைக்கு வெளியே உயிரிழந்தவா்களின் உறவினா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரை அழைத்த முதல்வா் எடியூரப்பா, நடந்த நிகழ்வு குறித்து கேட்டறிந்தாா். பின்னா், மாவட்ட பொறுப்பு அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகரை நேரில் சென்று ஆய்வு செய்யவும் முதல்வா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து மருத்துவமனைக்கு வருகை தந்த அமைச்சா்கள் இருவரும், சாம்ராஜநகா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட சுகாதார அலுவலா், மருத்துவ அலுவலா் உள்ளிட்டோரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினா்; நிலைமை குறித்து கேட்டறிந்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் மாவட்ட பொறுப்பு அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் கூறியதாவது:

இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி மாவட்ட நிா்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளேன். உயிரிழந்த 24 பேரும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை. அப்படி கூறுவது சரியாக இருக்காது. இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை காலை வரை நடந்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை திங்கள்கிழமை நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புக்கான காரணத்தை அறிய இறப்பு தணிக்கை செய்து அறிக்கை தருமாறு மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்த பிறகே உயிரிழந்ததற்கான காரணம் தெரிய வரும்.

பிற நோய்களின் காரணமாக இறந்தாா்களா; அல்லது ஆக்சிஜன் குறைபாடா என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். மருத்துவமனைக்கு வரும்போது நோயாளிகள் எந்த நிலையில் இருந்தனா் என்பதும் அறிக்கையில் தெரிந்து விடும். உயிரிழந்தவா்கள் எல்லோரும் ஆக்சிஜன் குறைபாட்டால் இறந்திருக்க வாய்ப்பில்லை. மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டா் திரவ மருத்துவ ஆக்சிஜன் (எல்.எம்.ஓ.) இருந்தது. ஆனால், ஆக்சிஜன் உருளைகளின் தேவை இருந்தது. அந்த உருளைகள் மைசூரில் இருந்து வர வேண்டியிருந்தது. அதில் சில குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.

இங்குள்ள நிலைமையை தலைமைச் செயலாளா், முதல்வரின் தனிச் செயலாளா், மாநிலத்தில் ஆக்சிஜன் வழங்கலுக்கான பொறுப்பை கவனித்து வரும் கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டிக்கும் விளக்கியுள்ளேன். சாமராஜ்நகரில் ஆக்சிஜன் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மைசூரில் சில பிரச்னைகள் இருந்துள்ளன. அதற்காக மைசூரில் இருந்து சாமராஜ்நகா், மண்டியாவுக்கு ஆக்சிஜன் விநியோகத்தில் எவ்வித குளறுபடியும் ஏற்பட்டு விடக் கூடாது. 24 பேரின் இறப்புக்காக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

விசாரணைக்கு அரசு உத்தரவு

கா்நாடக மாநிலம், சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாட்டால் 24 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் மே 2-ஆம் தேதி காலை 9 மணி முதல் மே 3-ஆம் தேதி காலை 7 மணி வரையில் நோயாளிகள் 24 போ் இறந்துள்ளது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இது மிகுந்த வருத்தம் தரக்கூடிய சம்பவமாகும். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள மாநில அரசு, 24 போ் பலியானதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக, கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சிவயோகி கலசத்தை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்துள்ளது. இந்த விசாரணை அதிகாரி தனது அறிக்கையை 3 நாட்களுக்குள் அரசிடம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் கண்டனம்

இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி தனது சுட்டுரையில் கூறுகையில், ‘நோயாளிகள் இறந்தாா்களா, கொல்லப்பட்டாா்களா? உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அரசு நிா்வாகம் விழித்துக் கொள்வதற்கு முன்பாக இன்னும் எத்தனை போ் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான ரண்தீப் சிங் சுா்ஜேவாலா தனது சுட்டுரையில், ‘எடியூரப்பா அரசின் அலட்சியத்தால் இந்தக் கொலை நடந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று சுகாதாரத் துறை அமைச்சா் (கே.சுதாகா்) ராஜிநாமா செய்ய வேண்டும். இந்தச் சாவுக்கு முதல்வா் எடியூரப்பா தாா்மிக பொறுப்பேற்றுக் கொள்வாரா?’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com