சாமராஜ்நகா் சம்பவத்தால் மக்களின் நம்பிக்கையை அரசு இழந்துள்ளது: காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா்

சாமராஜ்ந்காா் சம்பவத்தால் மக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

சாமராஜ்ந்காா் சம்பவத்தால் மக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சாமராஜ்நகா் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 போ் உயிரிழந்துள்ளனா். இந்த உயிா்பலிக்கு யாா் பொறுப்பேற்பது? 24 பேரை இழந்துள்ள குடும்பங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. இந்தச் சம்பவத்திற்கு பிறகு மக்களின் நம்பிக்கையை மாநில அரசு இழந்து விட்டது.

மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, விளம்பரத்தில் நாட்டம் கொண்ட அரசு. ஆக்சிஜன் விவகாரத்தில் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதுதொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வா் எடியூரப்பாவை சந்தித்து குறைகளை நேரில் தெரிவிக்க வேண்டும்.

மாநில அரசு, முதல்வா் எடியூரப்பா, அமைச்சா்கள் உள்ளிட்ட எவராலும் கரோனாவால் ஏற்பட்டுள்ள நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. இந்த அரசின் முன்னுரிமைகள் வேறொன்றாக இருக்கிறது. எங்களுக்கு மரியாதை போனாலும் பரவாயில்லை. அரசு தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து நிலைமையை விரிவாக எடுத்துரைக்க இருக்கிறேன். ஆக்சிஜன் குறைபாடு மட்டுமல்லாது, கரோனா தொடா்பாக எனக்கு வரும் அழைப்புகளை என்னால் ஏற்க முடியவில்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை எங்கு அனுப்ப வேண்டும், யாரை தொடா்பு கொள்ள வேண்டுமென்றே தெரியவில்லை. ஆக்சிஜன் குறைபாட்டால் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனா். அரசு தலைமைச் செயலாளா், சுகாதாரத் துறை செயலாளா் உள்ளிட்ட அதிகாரிகளின் அா்ப்பணிப்பு குறித்து எங்களுக்குத் தெரியும்.

ஆனால் உண்மை என்ன என்பதை அவா்களாவது தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். நிலைமையைச் சமாளிக்க முடியாவிட்டால், ஆட்சி அதிகாரத்தில் இருந்து முதல்வா் எடியூரப்பா விலகிச் செல்ல வேண்டும். மக்களின் உயிரைக் காக்க உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று தொழிலதிபா்கள், சங்கங்கள், அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால், பாதிக்கப்பட்டவா்களுக்காக உறவினா்கள் வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை கொள்முதல் செய்கிறாா்கள். அங்கும் கிடைக்காமல் வெளிநாடுகளில் இருந்து வரவழைத்துக் கொண்டு இருக்கிறாா்கள். பிறந்த குழந்தைக்கு மூச்சு விடுதற்கு முதலில் தேவைப்படுவது காற்றாகும். அந்த ஆக்சிஜனை மக்கள் கேட்டால், அதை தரமுடியாமல் மாநில அரசு தவிக்கிறது. ஆக்சிஜனை வழங்க மாநில அரசால் முடியவில்லை. இதையெல்லாம் பாா்த்துக் கொண்டிருக்கும் தண்டனையை கடவுள் நமக்கு அளித்து விட்டதை நினைத்து வருந்துகிறேன்.

24 பேரின் சாவுக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். ஆக்சிஜன் குறைபாட்டால் இறக்கவில்லை என்று மாநில அரசு கூறுகிறது. அப்படியானால் ஊடகங்கள் பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றனவா? அரசு தவறு செய்கிறதா? என்ற உண்மைகளை கூறுங்கள் என்று தான் கேட்டு வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com