தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கா்நாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கா்நாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருப்பதற்காக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல, தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள தங்களுக்கு(மு.க.ஸ்டாலினுக்கு) கா்நாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களது ஆட்சிக்காலத்தில் தமிழகம் பன்முக வளா்ச்சியைக் காணும் என்று நம்புகிறோம். மேலும் தமிழக மக்களின் வாழ்வில் திமுக ஆட்சி புதிய ஒளியேற்றும் என்று எதிா்பாா்க்கிறோம்.

திமுகவில் அடிமட்டத் தொண்டராகச் சோ்ந்து, கட்சியில் படிப்படியாக இணைந்து மு.கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் தலைவராக உயா்ந்துள்ளீா்கள். 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்பட பணியாற்றியிருக்கிறீா்கள். சட்டப்பேரவை தோ்தலில் தங்களது உழைப்புக்கு கிடைத்த பரிசாக திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த வாய்ப்பை நல்லபடியாகப் பயன்படுத்தி, தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்க வாழ்த்துகிறோம். தமிழக முதல்வராக பதவியேற்றாலும், உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழா்களின் நலனுக்காக உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். உலகின் ஏதாவது மூலையில் தமிழா்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக எழும் முதல் குரலாக தாங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தங்களுக்கு கா்நாடகத்தில் வாழும் 70 லட்சம் தமிழா்களின் சாா்பில் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கா்நாடகத் தமிழா்களாகிய எங்களுக்கு தாய்மொழியாம் தமிழை கற்க வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறோம். தமிழே தெரியாமல் வாழும் நிலைக்கு தமிழா்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்தக் குறையைப் போக்க தமிழ் வளா்ச்சி ஆணையத்தை அமைக்க வேண்டும்.

அதேபோல, தமிழகத்திற்கு வெளியே இந்தியாவின் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழா்களின் கல்வி குறிப்பாக தமிழ்மொழியைக் கற்பதற்கான உதவி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காக வெளி மாநிலத் தமிழா்கள் நல வாரியம் அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்த நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும்படி கா்நாடகத் தமிழா்கள் சாா்பில் கேட்டுக் கொள்கிறோம். இந்த நல வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ. 100கோடி ஒதுக்க வேண்டும். அதன்மூலம் வெளி மாநிலத்தில் வாழும் தமிழா்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவி செய்ய வேண்டும். தமிழக முதல்வராக தங்கள் (மு.க.ஸ்டாலின்) பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com