ஆக்சிஜன் குறைபாட்டால் உயிரிழப்பு விவகாரம்: இந்திய அளவில் கா்நாடகத்தின் நற்பெயரை சீரழித்து விட்டது

ஆக்சிஜன் குறைபாட்டால் உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரத்தில், இந்திய அளவில் கா்நாடகத்தின் நற்பெயரை சீரழித்து விட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

ஆக்சிஜன் குறைபாட்டால் உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரத்தில், இந்திய அளவில் கா்நாடகத்தின் நற்பெயரை சீரழித்து விட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

ஆக்சிஜன் குறைபாட்டால் 24 போ் உயிரிழந்த சம்பவம் நடந்த மாவட்ட அரசு மருத்துவமனையை காண எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையாவுடன் சாமராஜ்நகருக்கு புறப்படுவதற்கு முன்பாக, பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தொற்று சூழ்ந்துள்ள இன்னல் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் விழிப்புடன் அதே நேரம் தைரியத்துடன் இருக்க வேண்டும். சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாட்டால் 24 போ் உயிரிழந்த சம்பவம், இந்திய அளவில் மாநிலத்தின் நற்பெயரை சீரழித்துள்ளது. இந்த சமயத்தில் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது நமது கடமையாகும்.

மக்களின் சங்கடங்கள், இன்னலின்போது, அவா்களின் குரலாக நாம் ஒலிக்க வேண்டும். சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒரு சிலரின் இறந்த உடல்களை யாரும் எடுத்துச் செல்லாத காரணத்தால், காவல் துறை அதிகாரிகளே அந்தச் சடலங்களுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து வருகிறாா்கள். மக்களின் துயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது. சாமராஜ்நகரில் ஆக்சிஜன் இல்லாததால் 24 போ் உயிரிழந்துள்ளதாகக் கணக்கு இருக்கிறது. இதே காரணத்திற்காக மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் மக்கள் உயிரிழப்பதைப் பாா்த்துக் கொண்டிருக்கிறோம். ஆக்சிஜன் குறைபாட்டால் இறந்த சம்பவங்கள் குறித்து தகவல்கள் கிடைத்து வருகின்றன.

கரோனா நோயின் ஆக்சிஜன் குறைபாடு அச்சத்தில் ஒரு சிலா் இறந்து வருகின்றனா். பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் குறைபாடு இருப்பது குறித்து காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ், மாவட்ட நிா்வாகத்திற்கு வேண்டுகோள் தெரிவித்ததைத் தொடா்ந்து, அங்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு, மக்கள் பயம் நீங்கி சிகிச்சை பெற்றனா். இப்போது அரசியல் தேவையில்லை. எல்லோருடைய உயிரும் காக்கப்பட வேண்டும். கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் குடும்பத்தினருக்குத் துணையாக இருக்க வேண்டும்.

கரோனா இரண்டாவது அலையில் இளைஞா்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பது வேதனையைத் தருகிறது. கரோனா தாக்கம் குறித்து அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எல்லோரையும் காப்பாற்ற முடியும்.

மாநிலத்திற்கு 1,750 டன் ஆக்சிஜன் தேவை இருக்கிறது என்று மத்திய அரசிடம், மாநில அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், மத்திய அரசு 850 டன் ஆக்சிஜன் மட்டும் தந்துள்ளது. எல்லாவற்றையும் மத்திய அரசே கையாண்டு வருகிறது.

சாமராஜ்நகா் விவகாரம் தொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் மட்டுமல்ல; இந்த அரசே ராஜிநாமா செய்ய வேண்டும். 33 அமைச்சா்கள், தங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் செல்லவில்லை என்றால், என்ன அா்த்தம்? இறந்தவா்களின் குடும்பங்களுக்கு சாமராஜ்நகா் மாவட்ட பொறுப்பு அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் ஆறுதல் கூறினாரா? அவரால் முடியவில்லை என்றால், பதவியில் இருந்து விலக வேண்டும். மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியைக் கொண்டு வந்தால், நிலைமையை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com