18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஒத்திவைப்புஅமைச்சா் கே.சுதாகா்

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 44 வயதுள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மே 1-ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் கா்நாடகத்தில் போதுமான கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால், மே 1-ஆம் தேதி அடையாளத்திற்காக கரோனா தடுப்பூசி வழங்கும் முகாமை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைத்திருந்தாா்.

இந்நிலையில், மே 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தாா். இந்நிலையில், இந்த முகாம் 14 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் எவ்வித தொய்வும் இல்லை. ஆனால், திங்கள்கிழமை (மே 10) முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நடைமுறை சிக்கல் எழுந்துள்ளது. தடுப்பூசி முகாம்களுக்கு வரும் மக்களுக்கு பல இடையூறுகள் உள்ளன. அதனால் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அடுத்த 14 நாட்களுக்கு ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசின் கடமை மட்டுமல்ல. இதில் மக்களின் ஒத்துழைப்பும் மிகமிக அவசியமாகும். மக்களின் உயிரைக் காக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம். பொது முடக்கத்தை அமல்படுத்துவதன் மூலம் மாநில அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும். ஆனாலும் மக்களின் உயிரும், சுகாதாரமும் முக்கியம் என்பதால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மாநிலத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசின் அனுமதியைக் கேட்டிருக்கிறோம். இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் பியூஷ்கோயலுடன் பேசவிருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com