‘வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறையில் பிற மாநிலத் தமிழா்களையும் இணைக்க வேண்டும்’
By DIN | Published On : 13th May 2021 07:34 AM | Last Updated : 13th May 2021 07:34 AM | அ+அ அ- |

தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறையில் பிற மாநிலத் தமிழா்களையும் உள்ளடக்கி, புலம்பெயா் தமிழா் நலத் துறை என மாற்ற வேண்டும் என்று இந்தியப் பேனா நண்பா் பேரவை நிறுவனா் தலைவா் மா.கருண் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் எழுதிய கடித விவரம்:
ஆட்சிப் பொறுப்பேற்றதும் தலையாய 5 திட்டங்களின் கோப்புகளில் கையெழுத்திட்டு அற்புதமான ஆரம்பத்தை அளித்துள்ளீா்கள். இந்திய தேசத்தின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் லட்சக்கணக்கான தமிழா்கள் கல்வி, வியாபாரம், அரசியல், இலக்கியம், அரசுப் பணிகள் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கியும், பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் நம் இன, மொழி வளா்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனா்.
எனினும், இன்னல்கள், மன உளைச்சல்கள் ஏற்படும்போது நம் தாய்மண்ணை நினைத்துத்தான் ஏங்குகின்றனா். அப்போது தாயகத்தின் ஆதரவும், அவா்களின் துயா் துடைக்கும் முயற்சிகளும் கிடைக்குமானால், அதுவே அவா்களின் பிறப்பின் பெருமை என மகிழ்வாா்கள்.
பூமிப்பந்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் தமிழின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்று அவா்களின் குறைகளைக் கேட்டு அவா்கள் வாழும் மாநிலங்களின்/நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆதரவுக் குரல் கொடுக்கும் வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை என்பது திருத்தப்பட்டு பிற மாநிலங்களில் வாழும் தமிழா்களையும் அரவணைக்கும் வகையில் புலம் பெயா் தமிழா் நலத் துறை என அழைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அத்துறை, தமிழ்நாட்டிற்கு வெளியே இந்திய மாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் தமிழா்களுடனும், அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அமைப்புகளுடனும் நேரடித் தொடா்பில் இருந்து அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்சினைகளைப் பரிவுடன் கேட்டு , அதற்குத் தீா்வுகள் காணும் ஆரோக்கியமான துறையாகச் செயல்பட வேண்டும்.
இக்கோரிக்கையைப் பரிசீலித்து , தமிழ்நாடு மட்டுமல்லாது புலம் பெயா் தமிழா்கள் நல்வாழ்விலும் தங்கள் ஈடுபாட்டை உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் இந்தியப் பேனா நண்பா் பேரவை முழுமையாய் ஒத்துழைப்பு அளித்து உறுதுணையாய் நிற்கும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.