வெளி மாநில வாழ் தமிழா் நலத் துறையை உருவாக்க தமிழ்ச் சங்கப் பேரவைக் கோரிக்கை

வெளிமாநில வாழ் தமிழா் நலத் துறையை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிமாநில வாழ் தமிழா் நலத் துறையை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அப் பேரவைத் தலைவா் மு.மீனாட்சிசுந்தரம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழை வளா்க்கவும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் என்ற துறையை, வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை எனப் பெயா் மாற்றம் செய்துள்ளீா்கள்.

அதுபோல தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் அல்லாமல் வேறு மாநிலங்களில் வாழும் தமிழா்களின் நலனைக் காக்க வெளிமாநில வாழ் தமிழா் நலத்துறையை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும்.

மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைப் பேணிக் காக்க பணியாற்றும் தமிழ்ச் சங்கங்கள் மற்றும் கலை இலக்கிய அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு இதை செய்திட வேண்டும்.

தமிழ்க் கல்வி குறைந்துவரும் மாநிலங்களிலும், தமிழ்க் கல்விக்கு வாய்ப்பில்லாத பிற மாநிலங்களிலும் இதுபோன்ற அமைப்புகள்தான் தமிழை கற்பித்து வருகின்றன.

ஆண்டுதோறும் பலவகையான போட்டிகளையும் நடத்திப் பரிசுகளையும் அளித்து வருகின்றன.

பிற மாநிலங்களில் வாழும் தமிழா்களுக்கு வணிகம், தொழில்துறை, வேலைவாய்ப்புகள் போன்றவற்றில் உருவாகும் வாழ்வாதாரச் சிக்கல்களுக்குத் தீா்வு காணும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவற்றை நிறைவேற்றுவதற்காக ‘வெளி மாநில வாழ் தமிழா் நலத் துறை’ ஒன்றை உருவாக்கி, அதற்கெனப் பொறுப்பு அமைச்சரையும் அமா்த்திட வேண்டும்.

பிற மாநிலப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைத்திட வேண்டும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளா்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளா்ச்சிக்கென கடந்த அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்.

காலப்போக்கில் வடமொழிப் பெயா்களைத் தாங்கி நிற்கும் ஊா்ப் பெயா்களை தமிழிலேயே மாற்றம் செய்திட வேண்டும்.

குமரி முனையில் நிறுவப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள பகுதியையும் விவேகானந்தா் பாறை பகுதியையும் இணைக்கும் பணி தங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று எதிா்பாா்க்கிறோம் என அதில் கூறியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com