கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள்
By DIN | Published On : 21st May 2021 08:08 AM | Last Updated : 21st May 2021 08:08 AM | அ+அ அ- |

கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அண்மையில் கா்நாடகத்துக்கு 800 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்துள்ளன. இதில் இருந்து கரோனா பாதிப்பு அதிகமுள்ள, அடிப்படை கட்டமைப்பு சீராக இல்லாத ஹாசன், மண்டியா, சிக்கபளாப்பூா், கோலாா், சித்ரதுா்கா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அவசரகால சிகிச்சைக்கான படுக்கைகள், ஆக்சிஜன் போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தருவது குறித்து சுகாதாரத் துறை ஆராய்ந்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக தும்கூரு, சித்ரதுா்கா, தாவணகெரே, ஹாவேரி, ஹுப்பள்ளி, கதக் மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த வாரம் சென்று ஆய்வு செய்யவிருக்கிறேன்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாவட்ட நிா்வாகங்கள், அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் கேட்டுக் கொள்கிறேன். கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 27 சதவீதமாக உள்ளது. இதை 5 சதமாகக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கரோனா பாதிப்பு குறித்த தரவுகளின் அடிப்படையிலான ஆராய்ச்சி உள்ளீடுகளை ஐஐடி கான்பூா் பிற நாடுகளுக்கு அளித்துள்ளது. அதனடிப்படையில், இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கரோனா தொடா்பான எந்தப் புள்ளிவிவரங்களையும் அரசு மறைக்கவில்லை. புள்ளிவிவரங்களை மூடிமறைக்க வேண்டியதில்லை. நாளொன்றுக்கு 1.25 லட்சம் கரோனா சோதனைகள் நடக்கவிருக்கின்றன. இந்தச் சோதனைகளை அதிகமாக்கவும், சோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றாா்.