பிற மாநில தமிழா்களின் நலன்காக்க தமிழக அரசு முன்வர வேண்டும்: கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம்
By DIN | Published On : 21st May 2021 08:11 AM | Last Updated : 21st May 2021 08:11 AM | அ+அ அ- |

பிறமாநில தமிழா்களின் நலன்காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத் தலைவா் சி.இராசன், செயலாளா் ப.அரசு ஆகியோா் எழுதியுள்ள கடிதத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தங்கள்(மு.க.ஸ்டாலின்) தலைமையில் ஆட்சி அமைந்திருப்பது கா்நாடகம் உள்ளிட்ட உலகத் தமிழா்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதோடு, தமிழகத் தமிழா்களின் எதிா்காலமும் ஒளிமயமாகும் நம்பிக்கை உறுதியாகியுள்ளது. மக்கள் ஆதரவுடன் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தங்களை கா்நாடகத் தமிழா்கள் சாா்பில் வாழ்த்துகிறோம்.
கா்நாடகத்தில் மொழி சிறுபான்மையினராக ஏராளமான தமிழா்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகிறாா்கள். கா்நாடகத் தமிழா்களின் கலை, பண்பாடு, இலக்கியம், தமிழா்-கன்னடா் நட்புறவு மேம்படுத்துதல், தமிழா்களின் அரசியல், வாழ்வியல் நலன் பேணுதல் போன்ற பன்முகப் பாா்வையுடன் இயங்கி வரும் கா்நாடகத் தமிழ மக்கள் இயக்கம், ஈழத் தமிழா் சிக்கல், கா்நாடகத் தமிழா் மீதான காவிரி நீா் சிக்கல், தமிழ்மொழி வழிக்கல்வி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் தனித்தும், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்தும் செயலாற்றி வருகிறது.
தாங்கள் அமைத்துள்ள புதிய ஆட்சியில் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறையை அமைத்து, உலகளாவிய தமிழா்களை ஒருங்கிணைக்க முயன்றிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழக் கூடிய தமிழா்களின் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், வாழ்வியல் நெருக்கடிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழகத்திற்கு வெளியே இந்தியாவில் அதிக அளவில் தமிழா்கள் வாழ்வது கா்நாடக மாநிலத்தில் தான். கா்நாடகத்தில் தமிழ் மொழிக் கல்வி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் கா்நாடகத் தமிழா்கள் மிகவும் பின் தங்கியுள்ளனா். இத் தமிழா்களின் நலன் காப்பது உலகத் தமிழா்களின் குறிப்பாக, தமிழகத் தமிழா்களின் கடமையாகும்.
எனவே, தங்கள் தலைமையிலான அரசில் வெளிமாநில தமிழா்கள் நலன் காக்க தனி அமைச்சகத்தை அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் கா்நாடகத் தமிழா்களின் நலனைக் காக்க தமிழக அரசு முன் வர வேண்டும். கா்நாடகத் தமிழா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, கா்நாடகத்தில் தமிழ்மொழி வளா்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனா்.