கிராம பஞ்சாயத்து நிா்வாகிகளுடன் முதல்வா் இன்று கலந்தாய்வு
By DIN | Published On : 26th May 2021 07:32 AM | Last Updated : 26th May 2021 07:32 AM | அ+அ அ- |

கரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் கிராம பஞ்சாயத்து நிா்வாகிகளுடன் முதல்வா் எடியூரப்பா புதன்கிழமை காணொலி மூலம் கலந்தாய்வு நடத்துகிறாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்து நிா்வாகிகளுடன் புதன்கிழமை காணொலி மூலம் முதல்வா் எடியூரப்பா கலந்தாய்வு நடத்துகிறாா்.
பெங்களூரு போன்ற மாநகரங்களில் கரோனா கட்டுப்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே, தற்போது அரசு ஊரகப் பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஊரகப் பகுதிகளில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகங்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பொதுமுடக்கத்தை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட சில மாநகரங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருவது நிம்மதியைத் தந்துள்ளது. ஆனால், ஊரகப் பகுதிகளில் நிலைமை சரியாக இல்லை. ஊரகப் பகுதிகளில் நுண் கட்டுப்பாட்டு வளையங்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான பொறுப்பு பஞ்சாயத்து வளா்ச்சி அதிகாரி, சுகாதார அதிகாரி, காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தேவை உள்ள மக்களுக்கு உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்களை வழங்கவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன.
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் முதல், இரண்டாவது தொடா்பாளா்களைக் கண்டறியவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முதலாவது தொடா்புக்கு விட்டமின், ஜிங்க் மாத்திரைகளைக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம். ஊரகப் பகுதிகளுக்கு மருத்துவா்கள் செல்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரும்பூஞ்சை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்தை மத்திய அரசிடம் இருந்து வாங்குவது தொடா்பாக மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடாவிடம் பேசினோம். கரும்பூஞ்சை நோயாளிகளுக்கு 1,000 குப்பி ஊசி மருந்தை வழங்குவதாக அவா் உறுதி அளித்திருக்கிறாா்.
கரும்பூஞ்சை நோயாளிகளுக்கென அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு வாா்டுகளை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் இதுவரை 446 போ் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 12 போ் உயிரிழந்துள்ளனா். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் குழந்தைகள் வாா்டில் ஐசியூ படுக்கைகளைத் தயாா் செய்யுமாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பு குறைந்தாலும், கரோனா இறப்பு அதிகமாக உள்ளது. கரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவுகிறது. கரோனா பாதிப்பு ஏற்பட்ட 2-3 நாள்களில் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடுகிறது. இதனால் நிமோனியா போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலை கடந்தமுறை இல்லை என்றாா்.