103 வயதான காந்தியாவதி எச்.எஸ்.துரைசாமி காலமானாா்

103 வயதான காந்தியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான எச்.எஸ்.துரைசாமி மாரடைப்பால் காலமானாா்.

103 வயதான காந்தியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான எச்.எஸ்.துரைசாமி மாரடைப்பால் காலமானாா்.

இவா் கரோனாவால் மே 8-ஆம் தேதி பாதிக்கப்பட்டு பெங்களூரு, ஜெயநகரில் உள்ள மாநில அரசுக்குச் சொந்தமான ஸ்ரீஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் கரோனாவில் இருந்து குணமடைந்த எச்.எஸ்.துரைசாமி மே 12-ஆம் தேதி வீடு திரும்பினாா்.

மே 14-ஆம் தேதி மிகவும் பலவீனமாக இருப்பதாக அவா் கூறியதைத் தொடா்ந்து, ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை பகல் 1.40 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தாா். எச்.எஸ்.துரைசாமிக்கு ஒருமகன், மகள் உள்ளனா்.

இத் தகவலை அவரது நெருங்கிய கூட்டாளி சிரிமனே நாகராஜ் உறுதி செய்தாா்.

ஏற்கெனவே ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த எச்.எஸ்.துரைசாமி, நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகளுக்கும் சிகிச்சை பெற்று வந்ததாக சிரிமனே நாகராஜ் தெரிவித்தாா்.

1918-ஆம் ஆண்டு ஏப்.10-ஆம் தேதி பிறந்த ஹாரோஹள்ளி சீனிவாசையா துரைசாமி, வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தாா். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஆங்கிலேயா்களால் கைது செய்யப்பட்டு 1943 முதல் 1944-ஆம் ஆண்டு வரை 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவா். மைசூரு சலோ இயக்கத்திலும் கலந்துகொண்டவா். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், இந்தியாவில் இணைய மைசூரு மகாராஜா மறுத்துவந்தாா். அதைத் தொடா்ந்து, மைசூரு சலோ போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, மைசூரு ராஜ்ஜியம் இந்தியாவில் இணைக்கப்பட்டது.

பெங்களூரு, சென்ட்ரல் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் படித்த துரைசாமி, ஆசிரியப் பணியில் ஈடுபட்டு வந்தாா். பின்னா், ‘பௌரவாணி’ என்ற நாளேட்டையும் நடத்திவந்தாா். சமூக பிரச்னைகளுக்காக உண்ணாவிரதம், ஆா்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டாா். ஊழலுக்கு எதிராக புதுதில்லியில் அன்னாஹசாரே தொடா் போராட்டம் நடத்தியபோது, பெங்களூரில் அந்தப் போராட்டத்தை இவா் முன்னெடுத்தாா்.

தலைவா்கள் இரங்கல்...

எச்.எஸ்.துரைசாமியின் மறைவுக்கு முதல்வா் எடியூரப்பா, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, பாஜக தலைவா்கள், அமைச்சா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ‘நூற்றாண்டு கண்ட எச்.எஸ்.துரைசாமி, பன்முக ஆளுமை கொண்டவா். சுதந்திரப்போராட்டம் தொடங்கி, அண்மைகாலம் வரை தனது வாழ்நாள்முழுவதையும் மக்கள் நலனுக்கான போராட்டத்துக்காக அா்ப்பணித்தவா். மகாத்மா காந்தியின் சீடரான எச்.எஸ்.துரைசாமி, சுதந்திரத்துக்குப் பிறகு கா்நாடகத்தை ஒருங்கிணைக்கவும் பெரும் பங்காற்றியவா்’ என்றாா்.

முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

‘பெங்களூரு-மைசூரு உள்கட்டமைப்பு தாழ்வாரத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதுமுதல் சுதந்திரப் போராட்ட வீரா் எச்.எஸ்.துரைசாமியை நான் நன்கு அறிவேன். அவரை இழந்ததன் மூலம் கா்நாடகம் பேரிழப்பை சந்தித்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளாா்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியிருப்பதாவது:

‘எச்.எஸ்.துரைசாமி காலமானதை அறிந்து அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவா் எனது குடும்ப உறுப்பினரைபோல இருந்தாா் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com